Tuesday, April 15, 2014

எந்திரவீரன் எனும் மந்திரக்காரன்

தேவைகளும் அழுத்தங்களும் உருவாகும் போது புதிய பாதைகளுக்கான கதவுகளும் திறக்கப்படும் என்பதே விதியாகும். விஞ்ஞானக்கண்டு                     பிடிப்புகளுக்கும் இது பொருந்தும். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப்படுவதை ''பரமக்குடி''  முத்துப்பாண்டியும், ''பதுளை நகர்'' ரட்னாயக்கவும் உடனடியாகப் பார்க்க உதவியது இந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களே. ஆனால் இந்த விஞ்ஞானம் போர் என்ற அபாயகரமான விடயத்துக்குள்ளும்  புகுந்து விட்டது தான் சோகமான விடயம். தவிர்க்க முடியாததும் கூட. ஆம்.. அமெரிக்கா 2019ம் அண்டு அளவில் தனது படை வீரர்களின் தொகையை வெகுவாகக் குறைத்து ரோபோ வீரர்களை போருக்கு அமர்த்துவது பற்றி அறிவித்துள்ளது.
இன்றைய உலக வரைபடமே அமெரிக்கா  போன்ற ஆதிக்க சக்திகளின் பேனாவால் வரையப்பட்டுள்ளது என்று கூறலாம். இவர்களின் நோக்கமே உலக நாடுகளை வளைத்து அவற்றின் செல்வங்களை முடியும் வரை அள்ளுவது தான். என்னதான் பெரும் பணக்கார நாடாக இருந்தாலும் இராணுவ பலம் இல்லாவிட்டால் எல்லாமே பூஜ்யம் தான் என்பதும் இராணுவ பலத்தின் மூலம் கிடைக்கும் அங்கீகாரமே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம்   என்பதும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நன்கு தெரியும். ஆனால் இவ் விடயத்தில் இவர்களுக்குப்  பெரும் தலைவலியாக இருப்பது உயிர் இழப்புக்கள் தான். சாதாரண  குடி மக்களின் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்..? நான் கூறுவது இராணுவ வீரர்களின் உயிர் இழப்புக்களே. முக்கியமாக ஆப்கானிஸ்தான், வியட்நாம்,ஈராக் ஆகிய போர்களில் அமெரிக்க இழந்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.
                                  இப்படிப்பட்ட நிலையில் சில காலம் முன்பு கண்டுபிடிக்கப் பட்ட ''ஆளில்லாத - அதாவது விமானிகள் இல்லாத விமானங்கள்'' இவர்களின் தலைவலியைக்  கொஞ்சம் குறைத்தன  என்று கூறலாம். நாடுகளின் வான் பரப்பு எல்லை, இறைமை எதைப் பற்றியும் கவலைப்படாமல் நுழைந்து   தாக்கும் சக்தி கொண்டவை தான் இவை.விமானிகள் கைது, விமானிகள் மரணம், விமானிகளைக் காணவில்லை போன்ற சங்கடங்கள் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்த இவர்கள் மேலும் ரூம் போட்டு யோசித்ததில் நிச்சயம் TERMINATOR (1984) ஆங்கிலப் படம் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். நான் மதுரை நகரில்  டிக்கட் கிடைக்காமல் வீடு திரும்பிய ஒரே ஆங்கிலப் படம் இது தான். குண்டு வைத்தாலும், துப்பாக்கியால் துளைத்தாலும், நெருப்பு வைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து வந்து இயந்திர மனிதனாக மாறி எதிரிகளை  அழிப்பார் நடிகர் அர்னொல்ட் சேவஸ்நேகர். இப்பாத்திரத்தை உருவாக்கியவர் டைட்டானிக், அவதார் போன்ற திரைப்படங்களின் தந்தை ஜேம்ஸ் கமரூன் தான். இதே போன்ற ரோபோ போர் வீரர்களை  உருவாக்கவே அமெரிக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.
                                  மனிதனின் விரல் துப்பாக்கியின் மீது இருந்த காலம் மாறி வருகிறது. இன்று அதே விரல் இராணுவக் கட்டுப்பட்டு அறையில் உள்ள ரிமோட் கண்ட்ரோல் மீது இருக்கப் போகிறது. ஈராக் போரில்  தொடர்ந்து ஈடுபடும் ஒரு படைவீரன் அமெரிக்க எல்லையைத்  தாண்டியதே இல்லை என்றால் நம்ப முடிகிறதா.?இது எப்படி நடக்கிறது.? அங்குள்ள படை முகாமில் இருந்து கொண்டே ஆளில்லாத விமானங்களை இயக்கிய அவன் ஏராளமான
எதிரிகளை அழித்து, தீவிரவாதிகளின் முகாம்களையும் படமெடுத்து முடித்து ஒரு சில நிமிடங்களில் தனது மகளை சிறுவர் பூங்காவுக்கு   அழைத்துச் செல்ல முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த ரோபோ                    தொழில்நுட்பமே. இன்று வீதி ரோந்து, நேருக்கு நேர் யுத்தம், மறைந்திருந்து தாக்குதல் போன்ற அனைத்துக்கும் ரோபோக்கள்  வரபோவதாக அமெரிக்கா  கூறுகிறது என்றால்  இவர்கள் நீண்ட காலமாக இதற்கான சோதனைகளில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருப்பார்கள் என்பது உறுதி. இன்றைய உலக அதிசயமான இன்டர்நெட்டை இராணுவ தேவைகளுக்காக 1960ம் ஆண்டுகளிலேயே இரகசியமாகப் பயன்படுத்தியவர்கள் தான் இந்த அமெரிக்கர்கள். இதே போன்று தான் இந்த ரோபோ வீரர்கள் பற்றிய அறிவிப்புகளும் இருக்கின்றன. அமெரிக்கர்கள் மட்டும் தான் இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கூற முடியாது. இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், சீனா, ஈராக் போன்ற நாடுகளும் ரோபோ வீரர்களை உருவாக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றன.  ஆனால் ''உலக போலீஸ்காரன்'' அமெரிக்காதான் இவ்விடயத்தில் முன்னணியில் இருக்கிறது.,                                                                                                        ரோபோவீரர்களை   இராணுவ தேவைகளுக்குப் பயன்   படுத்துவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. போர்வீரர்களின் மரணம், அவர்களின் குடும்பங்களுக்குரிய நஷ்ட ஈடுகள், இவற்றை எல்லாம் வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் குழப்பங்கள்,  வழக்குகள், அங்கம் இழந்த வீரர்களைப் பராமரித்தல்  போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை.  ரோபோ வீரர்களுக்கு ஓய்வு, உறக்கம், உடை, உணவு, மதுவகைகள், உறைவிடம், மருத்துவ வசதி, சம்பளம் போன்ற  எதுவும் வழங்கத் தேவை இல்லை. அவற்றை எல்லாம் அவை  கேட்கவும் செய்யாது.  மேலும் அவை தனது சக ரோபோ வீரன் எதிரியின் கணைகளால் அழிந்து போனால் ஒரு நாளும் கோபம் கொள்ளது. எனவே பழிக்குப் பழி வாங்கவும் செய்யாது. பயம், களைப்பு, உயிரைக் காப்பாற்ற ஒடி ஒளிவது,  கோழைத்தனம் போன்றவையும்  நிச்ச்சயம் ரோபோ வீரர்களின்  குணங்களாக இருக்க முடியாது .
                                  அதே நேரத்தில் பாதகமான அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. ரோபோக்களின் கண்களுக்கு கையில் பூக்களோடும்,  முகத்தில் புன்னகையுடனும்  தன் தந்தையின் பிறந்த நாளுக்கு  வாழ்த்துச் சொல்ல ஓடோடிச்  செல்லும் 8 வயது சிறுமிக்கும், போர் டாங்கி T20 க்கும்  வேறுபாடு தெரியாமல் போய்  விடலாம். எனவே இவற்றுக்கு தெளிவான, சரியான ஆணைகளை வழங்காவிடில் மாபெரும் மனித அழிவுகள் ஏற்படுவது உறுதி.   எதிர்காலத்தில் ரோபோ வீரர்கள் தனது முடிவுகளைத் தானே எடுக்கும் அபாயமும் உள்ளது. ரோபோ வீரர்களுடன் சம்பந்தப்பட்ட கணினிகளுக்கு எதிரிகள் வைரஸ்கள அனுப்பி இவற்றை செயல் இழக்கச் செய்யலாம் என்பதும்  ஒரு பெரிய RISK தான். இவை தவிர தீவிரவாதிகளும்  ரோபோ வீரர்களை உருவாக்கத்  தொடங்கி விட்டால்  என்ன நடக்கும் என்று நான் சொல்லத் தேவை இல்லை. இராணுவ வேலை வாய்ப்புகளும் வெகுவாகக் குறையலாம். ஆயிரம் நன்மை-தீமைகள் இருந்தாலும் உலக நாடுகள் இவற்றின்  உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என்பது மட்டும்  உறுதி.                                                                                                                                                                        வாகன உற்பத்தியில் சுமார் 70 சதவிகித வேலைகளை மனிதர்களிடம் இருந்து ரோபோக்கள் பிடுங்கி எடுத்து விட்டன. இந்நிலை இனி யுத்த களங்களிலும் ஏற்படத்தான் போகிறது. சொல்ல முடியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் ''பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்க வேண்டும்'' என்று ரோபோக்கள் தேர்தல் மேடைகளில் பேசுவதைக் கேட்க வேண்டி வந்தாலும் வரலாம்...!

Wednesday, February 26, 2014

கத்தியின்றி ரத்தமின்றி வெட்டும் மனிதர்

அண்மையில் நான் மதுரை சென்றிருந்த போது ஓய்வு பெற்ற தணிக்கைக் குழு உறுப்பினர் திரு. தியாகராஜன்  அவர்களை சந்திக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அவர் திரைப்படத்  தணிக்கை சம்பந்தமாக  நாம் அறியாத பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றை இப்போது காண்போம். தணிக்கைக் குழுவில் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்  நிரந்தரமாகவும், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், கலைத்துறையினர் ஆகியோர் தற்காலிகமாகவும் நியமிக்கப்படுவர். இக் குழுவுக்கென்று பல சட்டங்களும் விதிமுறைகளும் உண்டு. அவற்றை மாற்றவோ மீறவோ எவராலும் முடியாது. இதனால் தான் தணிக்கைக் குழுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதால் எதுவித பயனும் ஏற்படுவதில்லை. அருவருப்பான வசனங்களையும், அளவுக்கு மீறிய ஆபாசம், மோசமான வன்முறை தேசவிரோதச் செயல், குழந்தைகளின்  மனத்தைக் காயப்படுத்தல், பெண்களைக் கேவலப்படுத்தல், உடல் ஊனமுற்றோரைப் புண்படுத்தல், தனிப்பட்ட அவதூறுகள், குறிப்பிட்ட ஜாதி-மத-இன குழுவினரைப் புண் படுத்தல், பயங்கரமான  படுகொலைகள், ஆகியவை  சம்பந்தப்பட்ட   காட்சிகளையும், வசனங்களையும்  தணிக்கை செய்யுமாறு தணிக்கை விதிமுறைகள் கூறுகின்றன. மேலும் திரைப்படக் காட்சிகள் இந்திய அரசின் இறையாண்மை, அரசியல், பண்பாடு, நீதிமன்றங்கள், சட்டங்கள்  ஆகியவற்றை மீறாமல் உள்ளனவா என்றும் கண்காணிக்கப்படுகிறது.
                                                         ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய 4 உறுப்பினர்களை வரச் சொல்லி அவர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்படும். திரையரங்கிற்கு வந்து சேரும் வரை மற்ற உறுப்பினர்கள் யார் என்பது  அவர்களுக்கே தெரியாது. படம் தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் வரை என்ன திரைப்படம் என்று கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு  இல்லை. இயக்குனரும் தயாரிப்பாளரும் அவசியம்  திரையரங்கிற்கு வெளியே காத்திருக்க வேண்டும்.படம் தொடங்கும் போது படத்தின் பெயர், நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய  விபரங்களும் தணிக்கை விதிமுறைகள் அடங்கிய புத்தகமும், CUT SHEET ம் கொடுக்கப்படும். 4 உறுப்பினர்களும் நீக்க வேண்டிய காட்சிகளையும் வசனங்களையும் CUT SHEET ல் குறித்துக் கொண்டே வருவார்கள்.  இவர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாக தனித்தனியே அமர்ந்திருப்பதால் ஒருவர் குறிக்கும் விபரங்கள் மற்றவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.                                                                                                                                                                                    பின்னர் அனைவரும் ஒரு அறையில் கூடி தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் காரணங்களோடு  விவாதிப்பார்கள். சர்ச்சை இல்லை என்றால் தயாரிப்பாளரை அழைத்து சான்றிதழை வழங்கி விடுவார்கள். சர்ச்சை இருந்தால் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் அழைத்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். படத்தின் கதைக்கும், தொடர்புக்கும் அக்காட்சி அவசியம் என்றும், தவறான உள் நோக்கத்தோடு   அமைக்கப்படவில்லை என்றும் தயாரிப்பாளர் வாதாடுவதுண்டு. அச்சந்தர்ப்பத்தில் அக்காட்சிகளை தணிக்கைக் குழு உறுப்பினர்கள்  மறு பரிசீலனை செய்வார்கள்.அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டால் மாத்திரமே அவை அனுமதிக்கப்படும். நீக்கப்பட்ட காட்சிகளுக்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் அவை இடம் பெற்ற பொசிட்டிவ் மற்றும் நெகடிவ் படச் சுருள்களை  தணிக்கை அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு படத்தின் DVD யும் வசன புத்தகமும் ( CENSOR SCRIPT) சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.  உறுப்பினர்களின் பொதுவான கருத்தின் அடிப்படையில் U (அனைவரும் பார்க்கலாம்  A (வயது வந்தவர்களுக்கு மட்டும்)  UA ( குழந்தைகள் பெற்றோருடன் பார்க்க அனுமதி) S (மருத்துவர்கள் போன்ற விசேட பிரிவினருக்கு) ஆகிய பிரிவுகளில் எது என்று முடிவு செய்யப்படும். நீக்கப்பட்ட காட்சிகளுக்கு தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளா விட்டால் சென்னையில் உள்ள தணிக்கைக் சபையின் மறு பரிசீலனைக் குழுவுக்கு திரைப்படம் திரையிடப்படும். அவர்கள் சரி என்றால் சான்றிதழ் வழங்கப் படும். ஆனால் அவர்களும் ஆட்சேபணை  தெரிவித்தால் புது டில்லி யில் உள்ள TRIBUNAL குழுவுக்கு திரைப்படம் திரையிடப்படும். அவர்களுடைய முடிவே இறுதியானது, என்றார் திரு. தியாகராஜன்
                                                 இன்றைய  பல திரைப்படங்கள் தணிக்கைக் குழுவால் பார்க்கப்பட்டதா   என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஆபாசமும் வன்முறையும் நிறைந்து காணப் படுகின்றனவே என்று அவரிடம் கேட்டதற்கு சிரித்த திரு தியாகராஜன், கதையின் தொடர்பு பாதிக்கப் படக்கூடாது  என்ற அடிப்படையில் அனுமதிக்கப் பட்ட  ஒரு சில காட்சிகளையே  நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எங்களால் பெரும்பாலான காட்சிகள் வெட்டி எறியப்பட்டதை நீங்கள் அறிந்திருக்க  வாய்ப்பில்லை. பெரும் செலவில் எடுக்கப்பட்ட  எத்தனையோ   காட்சிகளை நாங்கள் நீக்கியிருக்கின்றோம். வேறு வழியில்லை. நாங்கள் அனுமதி மறுக்கும் சில காட்சிகளை  புது டில்லி TRIBUNAL குழுவினர் அனுமதித்த கதைகளும் உண்டு என்று விளக்கினார்.
வெட்டப்பட்ட காட்சிகளை திருட்டுத்தனமாக இணைத்தால் என்ன நடக்கும்     என்று அவரிடம் வினவிய போது 3 ஆண்டுகள் சிறைத்  தண்டனை  அல்லது ஒரு லட்சம்  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும், என்றார். சில திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளனவே எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இவற்றை நீக்கினால் நாங்கள் இந்த அர்த்தத்தில் எழுதவில்லை நீங்கள் தான் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று இயக்குனர்கள்  வாதாடுவர். இவற்றை டப்பிங் இல் மாற்றிவிடும் படி வேண்டுகோள்  விடுத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. ஆனால் மிக மோசமான இரட்டை அர்த்த வசனங்களை நாம் அனுமதிப்பதில்லை.  எங்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நுணுக்கமாக எழுதப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் இடம் பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு, என்றார். 
நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டதற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எந்த ஒரு நடிகருக்கும் ரசிகராக இருப்பது கூடாது என்ற எண்ணம் கொண்டவன்  நான். அப்போது தான் பாரபட்சம் இல்லாமல் இங்கே பணியாற்ற முடியும். ஆனால் சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்கு மிகவும்  பிடிக்கும்.           தமிழனாய்ப்  பிறந்த எனக்கு  அவரது நடிப்பு பிடிக்காமல் இருக்க முடியுமா? என்றார் திரு.தியாகராஜன். இவருடன் உரையாடி முடித்ததும் என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்..இந்தியாவிலும் இலங்கையிலும்  உள்ள  ஜாதி-மத-இன வெறியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்டிப்பு நிறைந்த தணிக்கைக் குழு ஒன்றை நியமித்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்...?!  ஆனாலும் இது கொஞ்சம் பேராசை தான்...!





Friday, February 21, 2014

போட்டியில் தொலைந்த பொட்டி

எனது மனைவி திருமதி மேனகா தயாளன் வெள்ளவத்தையின் 37வது ஒழுங்கையில் ''மேனகா பியூட்டி சலூன்'' என்ற பிரபல  அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ''தெரண டிவி'' நடத்திய மணப்பெண் அலங்காரப்  போட்டியில் அவர் கலந்து கொண்டார். சுமார் 75 பேர் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் இவர் மட்டுமே தமிழர். உடன் சென்ற நானும் பார்வையாளர்களுடன்  இருந்தேன். போட்டியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அனைவரும் வெளியேறத்  தொடங்கினர். நாமும் வெளியேற  முற்படுகையில்  எனது மனைவியின் மேக் -அப் பெட்டி அவர் வைத்த அறையில் கணப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எம்முடன்  தொலைக்காட்சி நிறுவனத்தாரும் இணைந்து படப்பிடிப்பு அரங்கம் முழுவ தும் தேடியும்  அது கிடைக்கவில்லை. காணமல் போன பெட்டியில் சுமார் 50000 ரூபாய் பெறுமதியான அழகு சாதனப் பொருட்கள் இருந்தன. நாம் உடனடியாக அருகில் இருந்த காவல் துறை அலுவலகத்துக்குச்  சென்று முறையிடத் தயார் ஆகிவிட்டோம். எனினும் ''தெரண டிவி'' அதிகாரிகள்  ''இப்போது நீங்கள் காவல்துறை அலுவலகம் செல்லத்  தேவையில்லை. உங்கள் மேக்-அப் பெட்டிக்கு நாங்கள் பொறுப்பு. அதனை மீட்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் . கவலை வேண்டாம்''. என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். ''நல்லா போட்டியில் கலந்து கொண்டோம்டா சாமி...!'' என்ற வெறுப்புணர்வுடன் நாங்கள்  வீடு திரும்பினோம். மறு நாள் பகல் ஒரு மணி அளவில் எங்கள்  மேக்-அப் பெட்டி கிடைத்து விட்டது என்ற நல்ல செய்தியை சொல்லி எங்கள்  வயிற்றில் பாலை  வார்த்தார்கள்  ''தெரண டிவி'' அதிகாரிகள். நாம் உடனடியாக ''தெரண'' அலுவலகம் விரைந்தோம்.  போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் ஒருவரே தனது மேக்-அப் பெட்டியை  வைத்து விட்டு எனது மனைவியின் மேக்-அப் பெட்டியை வேண்டுமென்றே மாற்றி  எடுத்துச் சென்றது தெரிய வந்தது.  ''தெரண டிவி'' அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன்  தங்கள் புலனாய்வுத்  திறமையையும்  பயன்படுத்தி தீவிர விசாரணைகளை  உடனடியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.  தங்களுக்கே உரிய பாணியில் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக பெட்டியைத்  திருடிச்  சென்ற பெண் அலறியடித்துக் கொண்டு ''தெரண டிவி''  அலுவலகத்துக்கே வந்து மேக்-அப் பெட்டியை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.  பெட்டியை ஒப்படைக்கும் போது எங்கள்  முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதை அவர் தவிர்த்துக் கொண்டதை அவதானிக்க முடிந்தது. ''மன்னியுங்கள்..மாற்றி எடுத்துச் சென்று விட்டேன்..''என்று அவர் தட்டுத் தடுமாறி சமாளித்தாலும் அவரது முக பாவனையும் விழிகளும் அவரது திருட்டுத் தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டின. முக்கியமாக அவரது பெட்டியும் எனது மனைவியின் பெட்டியும் நிறத்திலும் வடிவமைப்பிலும் மாறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்டியில் உள்ள பொருட்களை சரி பார்த்து திருப்தி அடைந்த நாம் ''தெரண டிவி''   அதிகாரிகளுக்கு பல முறை நன்றி சொல்லி விடை பெற்றோம். எனது மனைவி தமிழர் என்பதைத் அறிந்த பிறகே இவர் தனது வேலையை காட்டியிருக்கிறார் என்பதை  எங்களால்  தெளிவாக உணர முடிந்தது. ''தமிழர்கள் இளிச்சவாயர்கள்... அப்பாவிகள்..பெட்டி போனால் போகிறது'' என்று சும்மா இருந்து விடுவார்கள் என  எண்ணி விட்டார் போலும். இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் போது நாம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுகளை விட நமது பெறுமதி வாய்ந்த பொருட்களைக் காப்பற்றிக் கொள்வது தான் அதிமுக்கியமான விடயம் என்பதை  இச்சம்பவம் எங்களுக்கு உணர்த்தி விட்டது.                                         தொடர்புகளுக்கு      MENAKA BEAUTY SALON,  14 1/1,  37TH LANE, WELLAWATTE, COLOMBO-06,  TELEPHONE 0777794190                                               

Friday, July 5, 2013

சிவகுருமுருகுவசி

எனது மாமா திரு முத்துவடுகு ராமசாமி அவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த சொல் தான் ''சிவகுருமுருகுவசி'' ஆகும். வலமிருந்து இடமாக மாற்றி வாசித்தாலும் அதே உச்சரிப்பு வருவது தான் இச்சொல்லின் சிறப்பு அம்சமாகும். அன்று முதல் இப்படிப்பட்ட சொற்களின் மீது எனக்கு பெரிதும் ஆர்வம் பிறந்தது. பாடசாலைக் காலத்திலேயே நாம் அறிந்த விகடகவி, தாத்தா, மாமா, பாப்பா, திகதி, காக்கா, போன்ற சொற்களும் இப்படிப்பட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டவையே. ஆங்கிலத்தில் இவற்றைப் PALINDROME என்பர்.ஆங்கிலத்தில் இத்தகைய சொற்கள் ஏராளம் உண்டு.அவற்றில் 10 சொற்களை மாத்திரம் இப்போது காண்போம்.
1) RADAR
2) LEVEL
3) ROTATOR
4) DAD
5) NOON
6) CIVIC
7) REFER
8) TENET
9) MADAM
10)MALAYALAM (LANGUAGE)

எமது தமிழ் மொழியிலும் இத்தகைய PALINDROMES சொற்கள் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் இருப்பதை விட  தமிழில் இருப்பவை மிகவும் குறைவே. தமிழில் நான் சேகரித்த  41 சொற்களையும், 2 இடப் பெயர்களையும் இப்போது காண்போம்.
1கலக
2கருக
3கடக
4கலைக
5கற்க
6காமுகா
7குடகு (மலை)
8தந்த
9தராத
10தகாத
11தாவுதா
12தாத்தா
13காக்கா
14துவளுவது
15தேடாதே
16தேறாதே
17தேயுதே
18தேடுதே
19மகரகம (ஊர்)
20மாமா
21மாறுமா
22மானமா
23மாயமா
24மாடமா
25மாதமா
26மேயுமே
27மேளமே
28மேகமே
29மோகமோ
30மோசமோ
31மோதுமோ
32வாழவா
33வாடவா
34விகடகவி 
35வினவி
36விடுவி
37வேகமாகவே
38பாபா
39பாப்பா
40யானையா 
41யோகியோ
42ஸ்ரீலஸ்ரீ
43திகதி

ஆங்கில மொழியில் PALINDROME முறையில் அமைக்கப்பட்ட நீளமான வாக்கியங்கள் ஏராளம் உள்ளன. இவை மிகவும் சுவாரஸ்யமும், நுணுக்கமும் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. இவற்றில் 10 வாக்கியங்களை மாத்திரம் இப்போது காண்போம்.
1) BORROW OR ROB
2) GODS DOG
3) STEP ON NO PETS
4) PULL UP IF I PULL UP
5) TOO HOT TO HOOT
6) LAMINATED E.T.ANIMAL
7) DRAW PUPILS LIP UPWARD
8) NO IT IS OPEN ON ONE POSITION
9) ARE WE NOT DRAWN ONWARD NEW ERA
10)TIDE NET SAFE SOON A NOOSE FASTENED IT

ஆங்கில மொழியில் பெரும் புலமை பெற்றவர்களுக்கு  இத்தகைய வாக்கியங்கள் அமைப்பது மிகவும் எளிது. காரணம்
1) ஆங்கில மொழியில் உள்ள மிகவும் குறைவான (26) எழுத்துக்கள்
2) ஒரே ஆங்கில எழுத்துக்குக் காணப்படும் பல வகையான உச்சரிப்புகள்
3) ஒரு  சொல்லின் தொடக்கத்தில், நடுவில், கடைசியில் என்று எந்தப் பகுதிக்குள்ளும் புகுந்து கொள்ளும்  அனைத்து  ஆங்கில எழுத்துக்களின் தன்மை
4) சொல்லுக்குள் இருந்தாலும் உச்சரிக்கப் படாத தன்மை (SILENT LETTERS)
5) ஆங்கில மொழியில் PALINDROME வாக்கியங்களைக் கண்டு பிடிக்கும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் அதிகமாக இருப்பது

ஆனால் தமிழ் மொழியில் இத்தகைய தன்மைகள் இல்லாத காரணத்தால் நீளமான PALINDROME வாக்கியங்களைத் தமிழில் அமைப்பது மிகவும் கடினமாகும். எனினும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தமிழ் மொழியிலும் இத்தகைய வாக்கியங்களை அமைக்க முடியும் என்று கூறியுள்ளார். இவர் தமிழ்-ஆங்கில PALINDROME வார்த்தைகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் இத்தகைய வாக்கியங்களை அமைக்கச் சொல்லி தனது வாசகர்களுக்குப் போட்டியொன்றை வைத்தார். ஆனால் எவரும் வெற்றி பெறவில்லை.

கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் அன்றே தமிழ் மொழியில் PALINDROME முறையில் ''மாலை மாற்று'' என்னும் திருப்பதிகம் மூலம் இறைவனை வணங்கிப் பாடியுள்ளார். வியக்க வைக்கும் அப்பாடலை இப்போது காண்போம்.

1)யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
  காணாகாமா  காழீயா மாமாயாநீ மாமாயா

2)யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
   யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

3)தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
   மாமாயாநீ  தாநாழீ காசாதாவா மூவாதா

4)நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
   மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
                                                                                             
5)யாகாலாமே யாகாழீ யாமேதாவீ   தாயாவீ                                          
   வீயாதாவீ  தாமேயா ழீகாயாமே லாகாயா

6)மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
   யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

7)நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே                                                                                                                                  
   நேதாநீகா ழீவேதா மாயாயே நீ மாயாநீ

8)நேணவராவிழ யாசைழியே வேகாதளேரிய ளாயுழிகா
    காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

9)காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
    பூமேலேமா லேகாழீ  காணீகாலே மேலேகா

10)வேரியுமே காழியயே யேனைனிணே மடளோகரதே
     தேரகளோடம  ணேநினையே யேயழி காவண மேயுரிவே

11)நேரகழாமித யாசழிதா  யேனனியேனனி  ளாயுழிகா
     காழியுளானின  யேனினயே தாழிச யாதமிழாகரனே
                                                                                                        

 திருஞானசம்பந்தரின் அற்புதமான தமிழ்ப் புலமையை இப்பாடலில் நாம்
காணலாம். அவர் செய்துள்ள சொல் விளையாட்டை ரசிக்க வேண்டுமெனில்  இப்பதினொரு பாடல்களையும் தனித்தனியாக கவனித்துப் படிக்க வேண்டும்.பாடலின் முதல் அடி,  இரண்டாம் அடியில் அப்படியே  வலமிருந்து இடமாக தலைகீழாகத் திரும்புவதைக் காணலாம். இவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தம் உண்டு. தமிழ் மொழியில் PALINDROME  முறையை முதலில் பயன்படுத்திய பெருமை திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனாரையே  சாரும்.

சில கட்டுரைகளின் உதவியுடன் சில தமிழ் PALINDROME வாக்கியங்களை நான் சேகரித்துள்ளேன். அவற்றை இப்போது காண்போம்
1) யானை பூனையா?
2) வா தாத்தா வா
3) மாடு ஓடுமா?
4) திருமால் மாருதி
5) மேள தாளமே
6) மோரு தருமோ?
7) யானையா பூ யானையா?
8) மாவடு போடுவமா?
9) தேளு மீளுதே
10)மோரு வருதே

எழுத்தாளர் சுஜாதா மூலம் நான் அறிந்து கொண்ட சில  வாக்கியங்களை இப்போது காண்போம்.
1) மாலா  போலாமா?
2) தேரு வருதே
3) மோரு போருமோ? ( போருமோ என்றால் பேச்சு வழக்கில் போதுமோ)


நானும் தமிழில் PALINDROME வாக்கியங்களை அமைக்க முடிவு செய்தேன். இது மிகவும் சவாலுக்குரிய விடயமாகவே இருந்தது. எனினும்  நீண்ட நாள்   முயற்சிக்குப் பிறகு 42 வாக்கியங்களை சொந்தமாக என்னால் உருவாக்க முடிந்தது. அவற்றை இப்போது காண்போம்
1) வா யார் சூர்யாவா?
2) விரலா ரவி?
3) மேனகா கற்க கானமே
4) வைதேகி தேவை
5) பாரு கிருபா
6) புதனா தபு?
7) கோவை தேடுதே வைகோ
8) வாசி தயாரி தெரியாத சிவா
9) வாசி சிவா
10)பாசமா சபா?
11)மாதவி பூ விதமா?
12)மாதவா கை வாதமா?
13)சுமா நீ மாசு
14)திருஸ்டி ஸ்ருதி
15)சுசி தா சிசு
16)சாரு பெருசா
17)மாது போதுமா?
18)வாடுதே  தேடு வா
19)போதுமோ மோது போ
20)மாறுதே தேறுமா?
21)மாணவா பூ வாணமா?
22)துருவி தா விருது
23)மாவதமா தவமா?
24)வேதமோ நீ மோதவே
25)வாடி வா
26)போடா போ
27)தோடு ஓடுதோ?
28)தருகவே கருத
29)தாவணி பணிவதா?
30)சாராத தராசா?
31)சேராத தராசே
32)குருதியை திருகு
33)தோகை கைதோ?
34)சைவ வசை
35)வைர ரவை
36)மா பலா லாபமா?
37)மாய சிகரமா ரகசியமா?
38)வைகை கை வை
39)திமுகவா கமுதி? (கமுதி-இந்திய ஊர்)
40)சுப பசு
41)குலவி நீ விலகு (குலவி - ஒன்றாக இருந்து)
42)வாதமோ நீ மோத வா
43)கை  வை, வைகை
44)தாமாக மாதா
45)கைதி பொதிகை

வா தாத்தா வா, மாடு ஓடுமா ஆகிய சொற்களை அடிப்படையாக வைத்து நான்
உருவாக்கியவை
1) வா மாமா வா
2) வா பாப்பா வா
3) மாடு தேடுமா?
4) மாடு வாடுமா?
5) மாடு பாடுமா?

இவ்வாக்கியங்களில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. சுத்தமான தமிழ் இலக்கணம் இவற்றிலுள்ள பெரும்பாலான வாக்கியங்களுக்குப் பொருந்தாது. இலக்கணத்தில் இருந்து சற்றே விலகினால் மாத்திரமே இவற்றை அமைக்க முடியும். அடுத்ததாக இவற்றின் அர்த்தங்களை சற்றே சுற்றி வளைத்துத் தான் விளங்கிக்கொள்ள முடியும். உதாரணமாக ''வேதமோ நீ மோதவே'' என்ற வாக்கியம் ''வேதம் கற்ற  நீ அது பற்றி என்னுடன் மோத வா'' என்று அழைப்பதைக் குறிக்கும்.''கைதி பொதிகை'' ''சாரு  பெருசா'' போன்ற அர்த்தம் இல்லாத வாக்கியங்களையும்  அமைக்கலாம். மேனகா, சூர்யா, கிருபா, ரவி, சாரு, மாதவி, போன்ற பல பெயர்களும் தமிழ் மொழியில் PALINDROMES அமைக்க பெரிதும் உதவி செய்வதை நாம் காணலாம். மேலும் கேள்வி  கேட்கும்  சொற்களாக இவற்றை அமைப்பதும்  எளிது. PALINDROMES பற்றிய எனது  ஆய்வுகள் இக்கட்டுரையுடன்  நிறைவு பெற்று விட வில்லை.  தொடர்ந்து இடம் பெறும். வாசகர்களும் தமிழில் PALINDROMES சொற்களையும், வாக்கியங்களும் அனுப்பி எனக்கு உதவலாம். நன்றி...வணக்கம்...!










Monday, December 3, 2012

தமிழின் கலப்பு மணம்

பாடசாலையில் எனது தமிழாசிரியர் ''CATAMARAN'' என்ற ஆங்கிலச்சொல் ''கட்டுமரம்'' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது என்றார்.அன்று முதல் இப்படிப்பட்ட சொற்களின் மீது எனக்குப் பெரிதும்  ஆர்வம் பிறந்தது. பொதுவாக எந்த ஒரு மொழியிலும் பிற மொழிச் சொற்கள் கலப்பது என்பது இயற்கையாகவே நடைபெறும் விடயமாகும். அதாவது ஒரு மொழி இன்னொரு மொழியில் இருந்து சொற்களைக் கடன் வாங்கிக் கொள்கின்றது.
மனித நாகரிக வளர்ச்சியின் காரணமாக மொழிகளுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்புகள் இதற்கு முக்கிய காரணமாகும். ஒரு மொழியைப் பேசும் மக்களோடு தொடர்புபடுகின்ற பிற மொழிகள் அம்மொழி மீது தாக்கத்தைச்
செலுத்துகின்றன. தமிழ் மொழி வளம் பெற்று விளங்கிய போதிலும் கூட தமிழர்களோடு பல்வேறு மொழிகளைப் பேசுவோர் தொடர்பு கொண்டதால் தமிழில் பிற மொழிக் கலப்பு உருவானது. வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய பண்டைய தமிழகத்திற்கு, மேலைத்தேய மற்றும் கீழைத்தேய வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினர். அவர்களோடு தமிழர்கள் கொண்ட தொடர்பினாலும் தமிழர்கள் பிற நாடுகளுக்கு சென்றதாலும் கணிசமான பிற மொழிச்சொற்கள் தமிழில் கலந்தன. பேரரசுகளின் சாம்ராஜ்யம், படையெடுப்புக்கள், அரசியல் மாற்றங்கள், போன்றவையும் மொழிக் கலப்புக்குக் காரணமாயின. உதாரணமாக முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் அரபு, உருது, பார்சி, மொழிச்சொற்கள் தமிழில் கலந்ததைக் குறிப்பிடலாம். முஸ்லிம்களின் இலக்கியமும் இதற்கு காரணமாக விளங்கியது.
சோழர் - கீழைச் சாளுக்கியர்  இடையே  ஏற்பட்ட  திருமண உறவுகள் கன்னட, துளு மொழிச் சொற்கள் தமிழில் கலக்கக் காரணமாயின. விஜய நகர நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு மொழிச்சொற்கள் தமிழில் புகுந்தன. வைதிக, சமண, பௌத்த, சமயங்களின் செல்வாக்கின் காரணமாக தமிழில் சம்ஸ்கிருத மொழிக் கலப்பு ஏற்பட்டது. வர்த்தகம், கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புதல், ஆகிய குறிக்கோள்களோடு  வந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சிகளின் விளைவாக அவர்களது மொழிச்செல்வாக்கு  தமிழில் ஏற்பட்டது. நம்மிடம் இல்லாத புதிய பொருட்களைப்  பிற நாட்டவரிடமிருந்து   நாம் பெற்றுப்  பயன்படுத்தும் போதும் அப்பொருட்களுக்குரிய பிற மொழிச்சொற்கள் தமிழில் கலந்தன.குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு மொழி சிறப்புப் பெற்று,  அம்மொழியில் அவ்விடயத்தைக் கற்கும் போதும், அத்துறை சார்ந்த பிற மொழிச்சொற்களும் தமிழில் கலந்தன.
                                                                                                                                                            17ம் நூற்றண்டில் இருந்தே கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். பின்னர் 200 ஆண்டுகள் எம்மை அவர்கள் ஆட்சி  செய்ததன் விளைவாக எல்லாத்துறைகளிலும் ஆங்கிலம் செல்வாக்குப் பெற்றது. கல்வித்துறையும் அவர்களின் வருகையால்  மறுமலர்ச்சியை அடைந்தது. புதுப் புது கற்கை நெறிகளும், பாட நூல்களும் வெளியிடப்பட்டமையால்  அவற்றைப் பயில்வோர் புதிய பல ஆங்கிலச் சொற்களைக் கற்க வேண்டி வந்தது. கணினி, இணைய தளங்கள், விண்வெளி ஆய்வுகள், நவீன போக்குவரத்து, பல்வகைப் பரிசோதனைகள், ஆகியவற்றின் தாக்கத்தால் நிறைய ஆங்கில மொழிச் சொற்கள் தமிழில் புகுந்த வண்ணம் உள்ளன.கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருப்பதும் இதற்குக் காரணமாகும். இந்த அழகிய ஆங்கில மொழியானது ஆழமான கருத்துக்களையும், விஞ்ஞான தொழில் நுட்ப சிந்தனைகளையும், தெளிவாகவும், செம்மையாகவும், அழுத்தமாகவும், வெளிப்படுத்தக் கூடிய அபார ஆற்றலைப் பெற்றுள்ளது. இன்று உலகில் உள்ள பிற மொழிகள் அனைத்தையும் விட அதிகமான  சொற் களஞ்சியத்தையும் அது கொண்டிருக்கின்றது. உலகின் பல்வேறு மொழிகளினதும் செல்வாக்குக்குட்பட்டு பல வேற்று மொழிச் சொற்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அப்படி ஆங்கில மொழி ஏற்றுக் கொண்ட சொல்லில் ஒன்று தான் எனது தமிழாசிரியர் கூறிய ''CATAMARAN'' என்று கூறலாம்.
                                                                                                                                                                                                                                                                                                                          இதே போன்று தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பெரிதும் ஒற்றுமை உள்ள சொற்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பாடசாலைக் காலத்திலேயே பிறந்து விட்டது. அன்று முதல் இன்று வரை சுமார் 155 சொற்களை சேகரித்து வைத்துள்ளேன். தற்போது கனடாவில் வசிக்கும் எனது மாமா திரு.முத்துநாகலிங்கம் சந்திரசேகரன் (சந்திரா மாமா)  அவர்கள் இந்த சொற்களை சேகரிக்கும் விடயத்தில் எனக்குப் பல உதவிகளைச் செய்தார். அவருக்கு எனது நன்றிகள்.  மேலும் அகராதிகள், பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், போன்றவையும் இப்பணிக்கு  உதவியாக இருந்தன. இன்று தமிழ் என்று எண்ணிக்கொண்டு நாம் பயன் படுத்தும் பல சொற்கள் தமிழ் அல்ல. எனவே தமிழ் அல்லாத  ஆனால் தமிழில் நாம் பயன்படுத்தும் சொற்களும்  இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எந்த ஒரு ஆங்கிலச் சொல்லும் ஏதேனும் ஒரு ஆங்கில அகராதியில் இருந்தால் மாத்திரமே இங்கு இடம்  பெறுகின்றது.மேலும் கார், பஸ்,கேஸ்,சினிமா, பேப்பர்,டிக்கெட்  போன்ற சொற்கள்  தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் அவை இப்பட்டியலில் இடம் பெறும் தகுதியைப் பெறவில்லை. இதோ...அந்த வியப்பூட்டும் பட்டியல்  உங்களுக்காக......   
1.CASH - காசு
2.RICE  - அரிசி
3.MANGO - மாங்காய்
4.VICTORY - வெற்றி
5.PATH - பாதை
6.NOSE - நாசி
7.CONDEMN - கண்டனம்
8.SURRENDER - சரண்
9.MOTHER - மாதா
10.MONTH - மாதம்
11.DATE - தேதி
12.MAN - மனிதன்
13.PRIZE -  பரிசு
14.WAGON  - வாகனம்
15.KILL  - கொல்
16.SHIRT - சட்டை
17.PAN  - பானை
18.CULTURE  - கலாசாரம்
19.PADRE  - பாதிரியார்
20.PLANK  - பலகை
21.VAIN  - வீண்
22.SANDAL  - சந்தனம்
23.NAME  - நாமம்
24.CHIT  - சீட்டு
25.NOTE - நோட்டம்
26.TEAK  - தேக்கு
27.LAKH  - லட்சம்
28.BOW  - பவ்யம்
29.MADAM  - மாது
30.WANT - வேண்டும்
31.SHAWL  - சால்வை
32.MIDDLE  - மத்தியில்
33.CUP  - கோப்பை
34.SACK  - சாக்கு
35.TONE  - தொனி
36.BUTTON  - பொத்தான்  
37.ALL  - எல்லாம்
38.EVERY  - ஒவ்வொரு
39.BROW  - புருவம்
40.SHOOT  - சுடு
41.PUT  - போடு
42.SHAVE  - சவரம்
43.SUGAR  - சர்க்கரை
44.GUAVA  - கொய்யா
45.PAPAYA , PAWPAW  - பப்பாளி
46.TOM TOM  - தம்பட்டம்
47.THREE - திரி
48.EIGHT  - எட்டு
49.ROSE  - ரோஜா
50.CATAMARAN  - கட்டுமரம்
51.WIDOW - விதவை
52.VILLA - இல்லம்
53.BOTTLE -போத்தல்      
54.TREASURY - திறைசேரி
55.FUNNEL - புனல்
56.KANGAROO - கங்காரு
57.CORUNDUM - குருந்தம் (படிக அமைப்புடன்  கூடிய ஒரு வகைக் கல்)
58.KETTLE - கேத்தல்
59.ADAMANT - அடம்
60.COOLIE - கூலி
61.COOL - குளிர்          
62.SLOGAN -  சுலோகம்
63.MONKEY -  மந்தி
64.RUPEE - ரூபாய்
65.CURRY - கறி  
66.CHEROOT - சுருட்டு
67.SAFARI - சவாரி 
68.VENGEANCE - வஞ்சம் 
69.YOGA - யோகா
70.YOGI - யோகி
71.CURSE - கரைச்சல்  
72.SCROLL - சுருள்
73.EDITION - ஏடு
74.MULLIGATAWNY - மிளகுத்தண்ணீர்
75.MINUTE - நிமிடம்
76.PROTEIN - புரதம்
77.MOUNT - மேடு
78.RECEIPT - ரசீது
79.RUDE - ருத்ரம்
80.GUARD - காத்தல்
81.PRESENCE -  பிரசன்னம்   
82.CUTLERY - கட்டாரி
83.MUSTACHE - மீசை
84.BRUTE - முரட்டு
85.ANCHOR - நங்கூரம்
86.PATCHOULI - பச்சிலை
87.HIGHER - உயர்
88.END - அந்தம்
89.VENOM - விஷம்
90.KIND - கனிவு
91.BOY - பையன்        
92.SARONG - சாரம்
93.TROOP - துருப்பு
94.CRIME -  குற்றம்  
95.COIR -  கயிறு  
96.PARLIAMENT - பாராளுமன்றம்
97.MOLECULE -  மூலக்கூறு  
98.ANGER - ஆங்காரம் 
99.COPRA - கொப்பரை 
100.MOSQUE -  மசூதி    
101.PEAR - பேரிக்காய்
102.BETEL - வெற்றிலை
103.CHAMPION -   ஜாம்பவான்
104.RING - ரீங்காரம்   
105.PEDESTRIAN - பாதசாரி
106.FORT - கோட்டை
107.MIND -  மனம்  
108.FLAME - பிளம்பு  
109.ATTACK -   அடி+ தாக்கு       
110.ROLLER -  உருளை
111.ROUND - உருண்டை
112.COTTAGE - கொட்டகை 
113.SPEECH -  பேச்சு
114.WORD - வார்த்தை
115.GINGER - இஞ்சி
116.FANAM - பணம்         
117.ONE - ஒன்று 
118.BATTALION -  பட்டாளம்
119.VILLAIN - வில்லன்
120.SERVICE - சேவை    
121.PALANKEEN, PALANQUIN - பல்லக்கு
122.NAVY, NAVIGATION - நாவாய்
123.CANAL - கான் 
124.NOVEL - நாவல் 
125.WIND - வாடை
126.DENTAL -  தந்தம்
127.MEGA -  மகா
128.IGNEOUS - அக்கினி
129.ANICUT - அணைக்கட்டு
130.BOND - பந்தம் 
131.PARAIAH -  பறையர்
132.VERANDAH - வெறுந்தரை   
133.VETIVER - வெட்டிவேர்
134.GODOWN - கிடங்கு, கிட்டங்கி
135.AYACUT - ஆயக்கட்டு
136.PALMYRAH - பனைமரம்
137.NEURON -  நரம்பு
138.BIRTH - பிறப்பு
139.WINNER - வென்றார்  
140.BOAT - படகு
141.CIRCLE, CIRCUS - சறுக்கல்    
142.SHUT - சாத்து
143.BULL -   புல்லம் (எருது) 
144.FLOWER - மலர்
145.TELE - தொலை
146.OTHER - இதர 
147.CHUNAM - சுண்ணாம்பு
148.PETTAH - பேட்டை
149.PUJA- பூசை       
150.CONGEE - கஞ்சி 
151.CONICOPOLY - கணக்குப்பிள்ளை
152.POONAC - புண்ணாக்கு
153.BALCONY -   பலகணி  
154.EDITORIAL -  ஏடு  இட்டோர் இயல்
155.ANACONDA -  ஆனைகொன்றான்
இப்பட்டியலில் உள்ள அனைத்துச் சொற்களும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டே சேர்க்கப்பட்டுள்ளன.  உதாரணமாக  EVERY  என்ற சொல்  எவ்ரி - ஒவ்வொரு என்று பிரிக்கப்பட்டது.  இவை இரண்டிலுமே  ''வ''கரமும், ''ர''கரமும் காணப்படுகின்றன. கூடுதல்  தகுதியாக எ , ஒ ஆகிய உயிரெழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. பிறகு இச் சொல் OV VORU - EVERY என்று பிரிக்கப்பட்டது. இவை இரண்டிலுமே ''V'' யும் ''R'' உம் காணப்படுகின்றன. கூடுதல் தகுதியாக E ,O ஆகிய உயிரெழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. எனவே  EVERY - ஒவ்வொரு  என்ற சொல் இப்பட்டியலில் இடம் பெறும் தகுதியைப் பெறுகின்றது.இச்சொற்கள்  இத்துடன் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. மேலும் பல இருக்கக்கூடும். அவை கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் இப்பட்டியலில் இடம்  பெறும். அதற்கு வாசகர்களே...நீங்களும் உதவலாம். மீண்டும்  சிந்திப்போம்..நன்றி..வணக்கம்.

Friday, October 19, 2012

நல்லதை நினைப்போம், நல்லதைச்செய்வோம், நல்லதே நடக்கும்.

''கண்டி தாத்தா'' என எங்களால் அன்போடு அழைக்கப்படும் எனது பாட்டனார் திரு ரா.மு.நாகலிங்கம் ராமநாதபுரம்  மாவட்டம் பரத்தவயல் கிராமத்தில் 1923ல் பிறந்தவராவார்.1941ல் புசல்லாவை  ஜவுளிக்கடையில் சாதாரண ஊழியராக இருந்த இவர் தன் கடும் உழைப்பினால் உயர்ந்து பிரபல வர்த்தகரானார். வர்த்தகத்தோடு தன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளாமல் கலை இலக்கிய சமூகப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1942ல் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் ''நேதாஜி'' வாலிபர் சங்கத்தை தொடங்கியதே இவரது சமூகப்பணியின் ஆரம்பம் எனலாம். இச்சங்கத்தின் மூலம் மலையக இளைஞர்  விழிப்புணர்வுக்குப் பாடுபட்டார். மேலும் 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது அதனை தமிழ் சிங்கள மக்களின் பேராதரவோடு புசல்லாவையில்   கொண்டாடினார். மகாத்மா காந்தியின் அஸ்தி இலங்கை வந்த போது மலையக மக்கள் அதனை தரிசனம் செய்வதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்தவர் இவரே. 1949ல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கம்பளை மாவட்ட செயலாளராகப்  பணி புரிந்ததன் முலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் இவர் போற்றப்பட்டார். பூமிதான இயக்கத்தந்தை ஆச்சாரியார் கிருபளானி, டாக்டர் சுப்பராயன், தமிழக புரட்சி இயக்கத் தலைவர்களான தோழர் ஜீவனந்தம், எஸ்.ஏ. ரஹீம் ஆகியோர் கம்பளை வந்த போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தார். 1951ல் யாழ் நகரில் நடந்த தமிழ் விழாவில் மத்திய மாகாண  தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1952 ல் ''கல்கி'' கிருஷ்ணமூர்த்தியின் அழைப்பை ஏற்று சென்னைத் தமிழ் விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது இவருக்கு திரு.வி.க, ராஜாஜி, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், போன்ற மாமேதைகளை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
                                                                                                                                                                                                                                                                                                                             கண்டி மாநகரின் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபராக இவர் இருந்த போதிலும் ''செய்தி'' நாகலிங்கம் என்ற செல்லப் பெயராலேயே இவர் அழைக்கப்பட்டார்.
ஆம்...1960ல் கண்டியிலிருந்தும் கொழும்பிலிருந்தும் இவர் தொடங்கிய ''செய்தி'' என்ற பத்திரிக்கை ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்ததோடு மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கும் அரும்பாடுபட்டது எனலாம். மலையக மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்மான உணர்வுகளை ஊக்குவிக்கக் கூடிய  கட்டுரைகளையும் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடிய  கவிதைகளையும் இப்பத்திரிக்கையில் வெளியிட்டார். இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழும் மலையகத் தமிழர்களின் பிரச்சனைகளையும் அன்றாடத் தேவைகளையும் ஆராய்வதற்கு இது பெரிதும் வழிவகுத்தது. முக்கியமாக குடியுரிமைப் பிரச்சனைகள், ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டு மலையக மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சுமார் 70 ஆண்டுகளுக்கு  முன்  ''நவஜீவன்'' சஞ்சிகையின் மூலம் மலையக இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ''மலைநாட்டு காந்தி'' கே.ராஜலிங்கம் அவர்களே இவரது பத்திரிக்கை உலக முன்னோடி எனலாம். ''செய்தி''பல இலக்கிய வடிவங்களுக்கும், இலக்கிய கர்த்தாக்களுக்கும் காத்திரமான களம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தது. இலக்கிய விமர்சனங்களும், மனோதத்துவக் கட்டுரைகளுமே செய்தியின் சிறப்பு அம்சங்களாக இருந்தன. பிரபல எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் ''எழு ஆண்டு கால இலக்கிய வளர்ச்சியில் அவசர குறிப்புகள்'' என்ற தொடர் கட்டுரைகள் இன்றைய இலக்கிய ஆய்வாளர்களுக்கு முக்கிய மூலாதாரமாக அமைந்துள்ளன. கி.வா.ஜகந்நாதன், அகிலன், நாராயணதுரைக்கண்ணன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, சுகி சுப்ரமணியன், மாயாவி போன்ற தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களெல்லாம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்தியில் வெளியிடப்பட்டு வந்ததே அதன் தரத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றன. புதியவர்களுக்கும் இவர் வாய்ப்பளித்து மலையகத்தில் புதிய கவிஞர்களும் எழுத்தாளர்களும் தோன்றச் செய்தார். இதனால் மலையக எழுத்தாளர் மன்றத் தலைவராக இவர் நியமிக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டார்.  இலங்கை - இந்திய கல்விமான்களுக்கும் செய்தியின் மூலம் இவர் சிறந்த சேவைகளை ஆற்றினார். கே.சி தங்கராஜா ''ஈழநாடு'' பத்திரிகையை தொடங்கிய பொது அவருக்கு வலது கையாக  நின்ற இவர் ''ஈழநாட்டை'' மலையகமெங்கும் விநியோகம் செய்தார். இதன் மூலம் மலையக - யாழ்ப்பாண நட்புறவுப் பாலத்தை முதலில் அமைத்த பெருமைக்குரியவரகவும் திகழ்ந்தார்.

பத்திரிகையோடு மாத்திரம் இவரது பணி நின்று விடவில்லை. பல்வேறு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டு வந்தார். ''அகஸ்தியர் பதிவுகள்'' , ''எரி  நெருப்பில் இடைபாதை இல்லை''  மற்றும் புகழ் பெற்ற கவிஞரும் தொழிற் சங்கத் தலைவருமாகிய சி.வி.வேலுப்பிள்ளையின் ''தேயிலைத் தோட்டத்திலே'', கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் ''தணியாத தாகம்'' ஆகிய நூல்கள் இவரது வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் இன்றும் கவிதா பதிப்பகம் என்ற நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆக்கங்கள் உட்பட பல நூல்களை வெளியிட்டு தமிழ் இலக்கியத்தின் செழுமைக்குப் பங்களிப்பு செய்து வருகிறார். பத்திரிகைத் துறையின் மூலம் இவர் ஆற்றிய கலை இலக்கியப் பணி இவருக்குப் பெயரைத் தந்ததோடு சான்றோர் பலரின் அன்பையும் நட்பையும் பெற்றுத் தந்தது. 1960ல் பாவேந்தர் பாரதிதாசனை சந்தித்தது முதல் அவர் மறையும் வரை இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. திரைப்பட  உலகைச்சேர்ந்த டி.கே.எஸ்.சகோதரர்களான பகவதி, சண்முகம் ஆகியோரும்  இவரது நண்பர்களே. தமிழ்ப் பேரறிஞர் வண. தனி நாயகம்  அடிகளோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இணைந்து பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. இவரோடு இணைந்து முன்னாள் இந்திய ஜனாதிபதி தத்துவ ஞானி இராதாகிருஷ்ணனை சந்தித்ததை தனக்குக் கிடைத்த பெரும் பேறாகவே இவர் கருதுகிறார். தமிழ் அறிஞர் ம.பொ.சிவஞானம் இலங்கை வரும் போதெல்லாம் கண்டியிலுள்ள இவரது வீட்டில் தான் தங்குவது வழக்கம். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு மலர் வெளியிட்டு மாபெரும் விழா  கொண்டாடினார். மகாகவி பாரதியாருக்கு ஆண்டு தோறும் கண்டி மாநகரில்  விழா  கொண்டாடி மகிழ்ந்தார். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனுக்கும் விழாக் கண்டார். 1966ல் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனுக்கு நடைபெற்ற மணி விழாவை கண்டியில் இரு தினங்களுக்கு கொண்டாடிய இவர் அதை ஒட்டிய மணிவிழா மலர் ஒன்றை ''செய்தி'' பத்திரிக்கை மூலம் வெளியிட்டார். கி.வா.ஜகந்நாதன் இவருக்கு அனுப்பிய கடிதத்தில் 
                                                              பாகு தின்ற தெனப் பேசும்
                                                             பண்பாளச் செம்மை
                                                             நாகலிங்கம் காட்டும்
                                                             நயம் கண்டேன்  தாகமுறும்
                                                            அன்பு கண்டேன்  வாழ்க 

என்று குறிப்பிட்டிருப்பதை இன்றும் பெருமையோடு நினைவு கூர்கிறார். கிரிக்கெட் வீரர் முரளிதரனின் தந்தை முத்தையா அவர்களும் இவரது நீண்ட நாள்  நெருங்கிய நண்பராவர். அந்த நட்பை மறவாத இவர் சென்னையில் இடம் பெற்ற முரளிதரனின் திருமணத்தில் முதல் நபராகக் கலந்து கொண்டார். 1983ல் இடம் பெற்ற பயங்கர இனக்கலவரம் காரணமாக இவர் கண்டியில் இருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அப்போது இவர் தனது வாழ் நாள் முழுதும் சேகரித்து வைத்திருந்த ஆயிரக் கணக்கான புத்தகங்களை மலையகப் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கியதே இவரது தொண்டு உள்ளத்தைப் பறை சாற்றுகிறது. இந்தியா, இலங்கை,மலேஷியா, உட்பட உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களுடன் இன்றும் இறுக்கமான நட்புறவுகளைக் கொண்ட இவர் அது பற்றி  எதுவும் அலட்டிக் கொள்ளாமல் மிக அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து மக்கள் பணியாற்றி வருவதே இவரிடம் காணப்படும் அற்புத குணாம்சமாக இருக்கிறது. நான்  எதாவது சாதனை செய்திருந்தால் அந்தப்பெருமைக்குரியவர் எனது அருமைத் துணைவியார்  இந்திராணி அம்மையார் தான் என்று பணிவோடு கூறும் இவர் 90  வயதை நெருங்கிய நிலையிலும் பேச்சு, செயல், உடல்நலம், நடை உடை பாவனைகளில் துடிப்புள்ள இளைஞனாகவே காட்சி தருகிறார்.  ''நல்லதை  நினைப்போம், நல்லதைச் செய்வோம், நல்லதே நடக்கும்'' என்ற தாரக மந்திரத்தையே உறுதியாக நம்பும்  ''கண்டி தாத்தா'' ரா.மு. நாகலிங்கம் அவர்கள்  நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து தனது சமூக இலக்கியத் தொண்டுகளை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

Wednesday, September 19, 2012

உனது கற்பனைக்கும் ஒரு அளவே இல்லையா ...?

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது. அற்புதமானது. கொண்டாட்டமானது. மேலும் அவ்வுலகம்  அதீதமான   கற்பனைகளையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்ளடக்கியது.இவ்விடயம்  அனைத்து தலைமுறைகளுக்கும் பொருந்தும் எனலாம் . எனது இரண்டாவது மகள் தருணிஷா கேட்ட ''கடவுளுக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்வார்''  என்ற கேள்வி ஒரு சிறிய உதாரணம் தான். இது போல் எத்தனை லட்சம் குழந்தைகளுக்கு எத்தனை கோடி கேள்விகள் எழும்பியிருக்கும்.. ? சிறுவயதில் என் மனதிலும் எத்தனையோ கற்பனைகள்  கேள்விகள் சந்தேகங்கள் எழும்பியிருக்கின்றன. அவற்றில் நினைவில் இருக்கும் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் ஒரு சில நகைச்சுவையாக இருக்கலாம். ஒரு சில  முட்டாள்தனமாகக் கூட  இருக்கலாம்.  ஆனால் அவை  அனைத்தும் நான் குழந்தையாக அல்லது சிறுவனாக இருந்த பொது இயல்பாக ஏற்பட்டவையே.. அந்தக் கற்பனைகள் இதோ....
1) இந்தியா செல்லும் விமானம் வானத்தில் பறப்பதால் இந்தியா வானத்தில் இருக்கிறது.
2) சிங்கம் காட்டுக்கே ராஜா என்பதால் அது கிரீடம் உட்பட ஒரு அரசன் அணியும்  அனைத்து அணிகலன்களையும் அணிந்திருக்கும்.
3) ''மரதன் ஓட்டம்'' திரு. மரதன் என்பவருடைய நினைவாக நடைபெறுகிறது. (இலங்கையிலுள்ள பத்திரிகைகள் MARATHON RACE ஐ ''மரதன் ஓட்டம்'' என்று        தமிழில் குறிப்பிடுவது வழக்கம்.)
4)பூமி உருண்டையாக இருப்பதால் பூமியின் அடிப்பகுதியில் வசிப்பவர்கள் தலைகீழாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.                                                                           5)தேர்தல் என்றால் ஒரு பெரிய தேரை பலர் சேர்ந்து தள்ளுவார்கள். (தேர் +தள்ளு =தேர்தல்.)
6 )கறுப்புப் பணம் என்பது முழுமையாக கறுப்பு நிறத்தில் அச்சடிக்கப் பட்ட பணம்.
7)ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும்  பணத்தை லட்சக்கணக்கில் அச்சடித்துக்  கொடுத்து விட்டால் அவர்கள் பணக்காரர்கள் ஆகி  விடுவார்கள் தானே...?என் அப்படி செய்வதில்லை...?
8) MAY DAY என்றால் அது ''மேடை'' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது (MAY DAY என்றொரு  தினம் இருப்பதே அப்போது எனக்குத் தெரியாது)                               9) மின்னலைப் பார்த்த அடுத்த நொடியில் கண்கள் குருடாகிவிடும். (எனது அத்தை திருமதி.ஜெயலட்சுமி மனோகரன் சிறு வயதில்  இப்படி பயமுறுத்தியது  என் மனதில் ஆழமாகப்  பதிந்து  விட்டதால் இன்றும் நான் மின்னலை நேரடியாகப் பார்ப்பதே  இல்லை)
10) ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தில் இடம் பெற்ற ''சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்'' என்ற பாடலைப் பாடியவர் எனது அத்தையான திருமதி பிரேமா கந்தசாமி (உண்மையில் பாடியவர் பி சுசீலா)
11)மயில் மனிதர்களின் கண்களைக்  கொத்தும் குணம் கொண்டது (ஒரு பழைய பக்தித் திரைப்படத்தில் கடவுள் மயில் முலமாக ஒரு நடிகருக்கு கண்களைக் கொத்தி தண்டனை வழங்குவார். அதை உண்மை என்று நம்பி விட்டேன். )
12) CARNIVAL  என்பது ஒரு தமிழ்ச்சொல். (காணி + வேல் = CARNIVAL)
13) '' அவள் பெரிய பெண் ஆகிவிட்டாள்'' என்று வீட்டில்  பெரியோர்கள் பேசிகொள்வார்கள். அப்படி என்றால் 3 அடி உயரமான ஒரு பெண் திடீரென்று  5 அடி உயரமாக வளர்ந்து விட்டாள்.
14 ) முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அபிரகாம் லிங்கன் ஒரு தமிழர். (அவரது பெயர் முத்துலிங்கம் தர்மலிங்கம் போலவே இருப்பதால்)
15 ) மறைந்த முன்னாள் கத்தோலிக்க மதத் தலைவர் போப் 2 வது ஜோன் பால் ஒரு தமிழர்.(தமிழில் இவரை அருளப்பர் சின்னப்பர் என்று குறிப்பிடுவதால் )
16 )முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை வானொலி செய்தி வாசிப்பாளர் ''சற்சொருபவதி'' யும் ஒரே நபர் தான். ( இந்திரா காந்தியின் முகத்தையே சற்சொருபவதியின்  முகமாக அவரது குரல் எனது  கற்பனையில் படமாகக் கொண்டு வந்ததால்)
17 ) தனது வேட்டியையே ''வடி'' கட்டியாகப்  பயன்படுத்துவதால் தான் எமது பதுளைக் கடையின் முன்னாள் மேனேஜர் திரு ''வடி''வேல் அவர்களுக்கு அந்தப்  பெயர் வந்தது.
18 ) இராமாயணம் மகாபாரதம் ஆகிய  காப்பியங்கள்  நான் படித்த  பண்டாரவளை செந்.தொமஸ் பாடசாலையிலும் அதனைச் சுற்றியுள்ள காடுகளிலும் மலைகளிலும்  இடம்  பெற்றது. ( அந்தப் பாடசாலை நூலகத்தில்  இந்த இரு காப்பியங்களையும் படித்ததால்)                                                                         19)அசுரர்களோடு போர் புரிந்த தேவர்கள் தான், முக்குலத்தோர் இனத்தைச்  சேர்ந்த தேவர்களாகப் பிறந்துள்ளனர்.
 
நிறைவு பெற்றது எனது குழந்தைக் கற்பனைகள் .....நன்றி  நண்பர்களே.... மீண்டும் சிந்திப்போம்.....விரைவில்.......!