Monday, December 3, 2012

தமிழின் கலப்பு மணம்

பாடசாலையில் எனது தமிழாசிரியர் ''CATAMARAN'' என்ற ஆங்கிலச்சொல் ''கட்டுமரம்'' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது என்றார்.அன்று முதல் இப்படிப்பட்ட சொற்களின் மீது எனக்குப் பெரிதும்  ஆர்வம் பிறந்தது. பொதுவாக எந்த ஒரு மொழியிலும் பிற மொழிச் சொற்கள் கலப்பது என்பது இயற்கையாகவே நடைபெறும் விடயமாகும். அதாவது ஒரு மொழி இன்னொரு மொழியில் இருந்து சொற்களைக் கடன் வாங்கிக் கொள்கின்றது.
மனித நாகரிக வளர்ச்சியின் காரணமாக மொழிகளுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்புகள் இதற்கு முக்கிய காரணமாகும். ஒரு மொழியைப் பேசும் மக்களோடு தொடர்புபடுகின்ற பிற மொழிகள் அம்மொழி மீது தாக்கத்தைச்
செலுத்துகின்றன. தமிழ் மொழி வளம் பெற்று விளங்கிய போதிலும் கூட தமிழர்களோடு பல்வேறு மொழிகளைப் பேசுவோர் தொடர்பு கொண்டதால் தமிழில் பிற மொழிக் கலப்பு உருவானது. வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய பண்டைய தமிழகத்திற்கு, மேலைத்தேய மற்றும் கீழைத்தேய வர்த்தகர்கள் வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினர். அவர்களோடு தமிழர்கள் கொண்ட தொடர்பினாலும் தமிழர்கள் பிற நாடுகளுக்கு சென்றதாலும் கணிசமான பிற மொழிச்சொற்கள் தமிழில் கலந்தன. பேரரசுகளின் சாம்ராஜ்யம், படையெடுப்புக்கள், அரசியல் மாற்றங்கள், போன்றவையும் மொழிக் கலப்புக்குக் காரணமாயின. உதாரணமாக முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில் அரபு, உருது, பார்சி, மொழிச்சொற்கள் தமிழில் கலந்ததைக் குறிப்பிடலாம். முஸ்லிம்களின் இலக்கியமும் இதற்கு காரணமாக விளங்கியது.
சோழர் - கீழைச் சாளுக்கியர்  இடையே  ஏற்பட்ட  திருமண உறவுகள் கன்னட, துளு மொழிச் சொற்கள் தமிழில் கலக்கக் காரணமாயின. விஜய நகர நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு மொழிச்சொற்கள் தமிழில் புகுந்தன. வைதிக, சமண, பௌத்த, சமயங்களின் செல்வாக்கின் காரணமாக தமிழில் சம்ஸ்கிருத மொழிக் கலப்பு ஏற்பட்டது. வர்த்தகம், கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புதல், ஆகிய குறிக்கோள்களோடு  வந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சிகளின் விளைவாக அவர்களது மொழிச்செல்வாக்கு  தமிழில் ஏற்பட்டது. நம்மிடம் இல்லாத புதிய பொருட்களைப்  பிற நாட்டவரிடமிருந்து   நாம் பெற்றுப்  பயன்படுத்தும் போதும் அப்பொருட்களுக்குரிய பிற மொழிச்சொற்கள் தமிழில் கலந்தன.குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு மொழி சிறப்புப் பெற்று,  அம்மொழியில் அவ்விடயத்தைக் கற்கும் போதும், அத்துறை சார்ந்த பிற மொழிச்சொற்களும் தமிழில் கலந்தன.
                                                                                                                                                            17ம் நூற்றண்டில் இருந்தே கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக இந்தியாவுடன் வர்த்தகம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். பின்னர் 200 ஆண்டுகள் எம்மை அவர்கள் ஆட்சி  செய்ததன் விளைவாக எல்லாத்துறைகளிலும் ஆங்கிலம் செல்வாக்குப் பெற்றது. கல்வித்துறையும் அவர்களின் வருகையால்  மறுமலர்ச்சியை அடைந்தது. புதுப் புது கற்கை நெறிகளும், பாட நூல்களும் வெளியிடப்பட்டமையால்  அவற்றைப் பயில்வோர் புதிய பல ஆங்கிலச் சொற்களைக் கற்க வேண்டி வந்தது. கணினி, இணைய தளங்கள், விண்வெளி ஆய்வுகள், நவீன போக்குவரத்து, பல்வகைப் பரிசோதனைகள், ஆகியவற்றின் தாக்கத்தால் நிறைய ஆங்கில மொழிச் சொற்கள் தமிழில் புகுந்த வண்ணம் உள்ளன.கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருப்பதும் இதற்குக் காரணமாகும். இந்த அழகிய ஆங்கில மொழியானது ஆழமான கருத்துக்களையும், விஞ்ஞான தொழில் நுட்ப சிந்தனைகளையும், தெளிவாகவும், செம்மையாகவும், அழுத்தமாகவும், வெளிப்படுத்தக் கூடிய அபார ஆற்றலைப் பெற்றுள்ளது. இன்று உலகில் உள்ள பிற மொழிகள் அனைத்தையும் விட அதிகமான  சொற் களஞ்சியத்தையும் அது கொண்டிருக்கின்றது. உலகின் பல்வேறு மொழிகளினதும் செல்வாக்குக்குட்பட்டு பல வேற்று மொழிச் சொற்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அப்படி ஆங்கில மொழி ஏற்றுக் கொண்ட சொல்லில் ஒன்று தான் எனது தமிழாசிரியர் கூறிய ''CATAMARAN'' என்று கூறலாம்.
                                                                                                                                                                                                                                                                                                                          இதே போன்று தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பெரிதும் ஒற்றுமை உள்ள சொற்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பாடசாலைக் காலத்திலேயே பிறந்து விட்டது. அன்று முதல் இன்று வரை சுமார் 155 சொற்களை சேகரித்து வைத்துள்ளேன். தற்போது கனடாவில் வசிக்கும் எனது மாமா திரு.முத்துநாகலிங்கம் சந்திரசேகரன் (சந்திரா மாமா)  அவர்கள் இந்த சொற்களை சேகரிக்கும் விடயத்தில் எனக்குப் பல உதவிகளைச் செய்தார். அவருக்கு எனது நன்றிகள்.  மேலும் அகராதிகள், பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், போன்றவையும் இப்பணிக்கு  உதவியாக இருந்தன. இன்று தமிழ் என்று எண்ணிக்கொண்டு நாம் பயன் படுத்தும் பல சொற்கள் தமிழ் அல்ல. எனவே தமிழ் அல்லாத  ஆனால் தமிழில் நாம் பயன்படுத்தும் சொற்களும்  இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எந்த ஒரு ஆங்கிலச் சொல்லும் ஏதேனும் ஒரு ஆங்கில அகராதியில் இருந்தால் மாத்திரமே இங்கு இடம்  பெறுகின்றது.மேலும் கார், பஸ்,கேஸ்,சினிமா, பேப்பர்,டிக்கெட்  போன்ற சொற்கள்  தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும் அவை இப்பட்டியலில் இடம் பெறும் தகுதியைப் பெறவில்லை. இதோ...அந்த வியப்பூட்டும் பட்டியல்  உங்களுக்காக......   
1.CASH - காசு
2.RICE  - அரிசி
3.MANGO - மாங்காய்
4.VICTORY - வெற்றி
5.PATH - பாதை
6.NOSE - நாசி
7.CONDEMN - கண்டனம்
8.SURRENDER - சரண்
9.MOTHER - மாதா
10.MONTH - மாதம்
11.DATE - தேதி
12.MAN - மனிதன்
13.PRIZE -  பரிசு
14.WAGON  - வாகனம்
15.KILL  - கொல்
16.SHIRT - சட்டை
17.PAN  - பானை
18.CULTURE  - கலாசாரம்
19.PADRE  - பாதிரியார்
20.PLANK  - பலகை
21.VAIN  - வீண்
22.SANDAL  - சந்தனம்
23.NAME  - நாமம்
24.CHIT  - சீட்டு
25.NOTE - நோட்டம்
26.TEAK  - தேக்கு
27.LAKH  - லட்சம்
28.BOW  - பவ்யம்
29.MADAM  - மாது
30.WANT - வேண்டும்
31.SHAWL  - சால்வை
32.MIDDLE  - மத்தியில்
33.CUP  - கோப்பை
34.SACK  - சாக்கு
35.TONE  - தொனி
36.BUTTON  - பொத்தான்  
37.ALL  - எல்லாம்
38.EVERY  - ஒவ்வொரு
39.BROW  - புருவம்
40.SHOOT  - சுடு
41.PUT  - போடு
42.SHAVE  - சவரம்
43.SUGAR  - சர்க்கரை
44.GUAVA  - கொய்யா
45.PAPAYA , PAWPAW  - பப்பாளி
46.TOM TOM  - தம்பட்டம்
47.THREE - திரி
48.EIGHT  - எட்டு
49.ROSE  - ரோஜா
50.CATAMARAN  - கட்டுமரம்
51.WIDOW - விதவை
52.VILLA - இல்லம்
53.BOTTLE -போத்தல்      
54.TREASURY - திறைசேரி
55.FUNNEL - புனல்
56.KANGAROO - கங்காரு
57.CORUNDUM - குருந்தம் (படிக அமைப்புடன்  கூடிய ஒரு வகைக் கல்)
58.KETTLE - கேத்தல்
59.ADAMANT - அடம்
60.COOLIE - கூலி
61.COOL - குளிர்          
62.SLOGAN -  சுலோகம்
63.MONKEY -  மந்தி
64.RUPEE - ரூபாய்
65.CURRY - கறி  
66.CHEROOT - சுருட்டு
67.SAFARI - சவாரி 
68.VENGEANCE - வஞ்சம் 
69.YOGA - யோகா
70.YOGI - யோகி
71.CURSE - கரைச்சல்  
72.SCROLL - சுருள்
73.EDITION - ஏடு
74.MULLIGATAWNY - மிளகுத்தண்ணீர்
75.MINUTE - நிமிடம்
76.PROTEIN - புரதம்
77.MOUNT - மேடு
78.RECEIPT - ரசீது
79.RUDE - ருத்ரம்
80.GUARD - காத்தல்
81.PRESENCE -  பிரசன்னம்   
82.CUTLERY - கட்டாரி
83.MUSTACHE - மீசை
84.BRUTE - முரட்டு
85.ANCHOR - நங்கூரம்
86.PATCHOULI - பச்சிலை
87.HIGHER - உயர்
88.END - அந்தம்
89.VENOM - விஷம்
90.KIND - கனிவு
91.BOY - பையன்        
92.SARONG - சாரம்
93.TROOP - துருப்பு
94.CRIME -  குற்றம்  
95.COIR -  கயிறு  
96.PARLIAMENT - பாராளுமன்றம்
97.MOLECULE -  மூலக்கூறு  
98.ANGER - ஆங்காரம் 
99.COPRA - கொப்பரை 
100.MOSQUE -  மசூதி    
101.PEAR - பேரிக்காய்
102.BETEL - வெற்றிலை
103.CHAMPION -   ஜாம்பவான்
104.RING - ரீங்காரம்   
105.PEDESTRIAN - பாதசாரி
106.FORT - கோட்டை
107.MIND -  மனம்  
108.FLAME - பிளம்பு  
109.ATTACK -   அடி+ தாக்கு       
110.ROLLER -  உருளை
111.ROUND - உருண்டை
112.COTTAGE - கொட்டகை 
113.SPEECH -  பேச்சு
114.WORD - வார்த்தை
115.GINGER - இஞ்சி
116.FANAM - பணம்         
117.ONE - ஒன்று 
118.BATTALION -  பட்டாளம்
119.VILLAIN - வில்லன்
120.SERVICE - சேவை    
121.PALANKEEN, PALANQUIN - பல்லக்கு
122.NAVY, NAVIGATION - நாவாய்
123.CANAL - கான் 
124.NOVEL - நாவல் 
125.WIND - வாடை
126.DENTAL -  தந்தம்
127.MEGA -  மகா
128.IGNEOUS - அக்கினி
129.ANICUT - அணைக்கட்டு
130.BOND - பந்தம் 
131.PARAIAH -  பறையர்
132.VERANDAH - வெறுந்தரை   
133.VETIVER - வெட்டிவேர்
134.GODOWN - கிடங்கு, கிட்டங்கி
135.AYACUT - ஆயக்கட்டு
136.PALMYRAH - பனைமரம்
137.NEURON -  நரம்பு
138.BIRTH - பிறப்பு
139.WINNER - வென்றார்  
140.BOAT - படகு
141.CIRCLE, CIRCUS - சறுக்கல்    
142.SHUT - சாத்து
143.BULL -   புல்லம் (எருது) 
144.FLOWER - மலர்
145.TELE - தொலை
146.OTHER - இதர 
147.CHUNAM - சுண்ணாம்பு
148.PETTAH - பேட்டை
149.PUJA- பூசை       
150.CONGEE - கஞ்சி 
151.CONICOPOLY - கணக்குப்பிள்ளை
152.POONAC - புண்ணாக்கு
153.BALCONY -   பலகணி  
154.EDITORIAL -  ஏடு  இட்டோர் இயல்
155.ANACONDA -  ஆனைகொன்றான்
இப்பட்டியலில் உள்ள அனைத்துச் சொற்களும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டே சேர்க்கப்பட்டுள்ளன.  உதாரணமாக  EVERY  என்ற சொல்  எவ்ரி - ஒவ்வொரு என்று பிரிக்கப்பட்டது.  இவை இரண்டிலுமே  ''வ''கரமும், ''ர''கரமும் காணப்படுகின்றன. கூடுதல்  தகுதியாக எ , ஒ ஆகிய உயிரெழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. பிறகு இச் சொல் OV VORU - EVERY என்று பிரிக்கப்பட்டது. இவை இரண்டிலுமே ''V'' யும் ''R'' உம் காணப்படுகின்றன. கூடுதல் தகுதியாக E ,O ஆகிய உயிரெழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. எனவே  EVERY - ஒவ்வொரு  என்ற சொல் இப்பட்டியலில் இடம் பெறும் தகுதியைப் பெறுகின்றது.இச்சொற்கள்  இத்துடன் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. மேலும் பல இருக்கக்கூடும். அவை கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் இப்பட்டியலில் இடம்  பெறும். அதற்கு வாசகர்களே...நீங்களும் உதவலாம். மீண்டும்  சிந்திப்போம்..நன்றி..வணக்கம்.

Friday, October 19, 2012

நல்லதை நினைப்போம், நல்லதைச்செய்வோம், நல்லதே நடக்கும்.

''கண்டி தாத்தா'' என எங்களால் அன்போடு அழைக்கப்படும் எனது பாட்டனார் திரு ரா.மு.நாகலிங்கம் ராமநாதபுரம்  மாவட்டம் பரத்தவயல் கிராமத்தில் 1923ல் பிறந்தவராவார்.1941ல் புசல்லாவை  ஜவுளிக்கடையில் சாதாரண ஊழியராக இருந்த இவர் தன் கடும் உழைப்பினால் உயர்ந்து பிரபல வர்த்தகரானார். வர்த்தகத்தோடு தன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளாமல் கலை இலக்கிய சமூகப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1942ல் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் ''நேதாஜி'' வாலிபர் சங்கத்தை தொடங்கியதே இவரது சமூகப்பணியின் ஆரம்பம் எனலாம். இச்சங்கத்தின் மூலம் மலையக இளைஞர்  விழிப்புணர்வுக்குப் பாடுபட்டார். மேலும் 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது அதனை தமிழ் சிங்கள மக்களின் பேராதரவோடு புசல்லாவையில்   கொண்டாடினார். மகாத்மா காந்தியின் அஸ்தி இலங்கை வந்த போது மலையக மக்கள் அதனை தரிசனம் செய்வதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்தவர் இவரே. 1949ல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கம்பளை மாவட்ட செயலாளராகப்  பணி புரிந்ததன் முலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் இவர் போற்றப்பட்டார். பூமிதான இயக்கத்தந்தை ஆச்சாரியார் கிருபளானி, டாக்டர் சுப்பராயன், தமிழக புரட்சி இயக்கத் தலைவர்களான தோழர் ஜீவனந்தம், எஸ்.ஏ. ரஹீம் ஆகியோர் கம்பளை வந்த போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தார். 1951ல் யாழ் நகரில் நடந்த தமிழ் விழாவில் மத்திய மாகாண  தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1952 ல் ''கல்கி'' கிருஷ்ணமூர்த்தியின் அழைப்பை ஏற்று சென்னைத் தமிழ் விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது இவருக்கு திரு.வி.க, ராஜாஜி, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், போன்ற மாமேதைகளை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
                                                                                                                                                                                                                                                                                                                             கண்டி மாநகரின் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபராக இவர் இருந்த போதிலும் ''செய்தி'' நாகலிங்கம் என்ற செல்லப் பெயராலேயே இவர் அழைக்கப்பட்டார்.
ஆம்...1960ல் கண்டியிலிருந்தும் கொழும்பிலிருந்தும் இவர் தொடங்கிய ''செய்தி'' என்ற பத்திரிக்கை ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்ததோடு மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கும் அரும்பாடுபட்டது எனலாம். மலையக மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்மான உணர்வுகளை ஊக்குவிக்கக் கூடிய  கட்டுரைகளையும் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடிய  கவிதைகளையும் இப்பத்திரிக்கையில் வெளியிட்டார். இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழும் மலையகத் தமிழர்களின் பிரச்சனைகளையும் அன்றாடத் தேவைகளையும் ஆராய்வதற்கு இது பெரிதும் வழிவகுத்தது. முக்கியமாக குடியுரிமைப் பிரச்சனைகள், ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டு மலையக மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சுமார் 70 ஆண்டுகளுக்கு  முன்  ''நவஜீவன்'' சஞ்சிகையின் மூலம் மலையக இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ''மலைநாட்டு காந்தி'' கே.ராஜலிங்கம் அவர்களே இவரது பத்திரிக்கை உலக முன்னோடி எனலாம். ''செய்தி''பல இலக்கிய வடிவங்களுக்கும், இலக்கிய கர்த்தாக்களுக்கும் காத்திரமான களம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தது. இலக்கிய விமர்சனங்களும், மனோதத்துவக் கட்டுரைகளுமே செய்தியின் சிறப்பு அம்சங்களாக இருந்தன. பிரபல எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் ''எழு ஆண்டு கால இலக்கிய வளர்ச்சியில் அவசர குறிப்புகள்'' என்ற தொடர் கட்டுரைகள் இன்றைய இலக்கிய ஆய்வாளர்களுக்கு முக்கிய மூலாதாரமாக அமைந்துள்ளன. கி.வா.ஜகந்நாதன், அகிலன், நாராயணதுரைக்கண்ணன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, சுகி சுப்ரமணியன், மாயாவி போன்ற தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களெல்லாம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்தியில் வெளியிடப்பட்டு வந்ததே அதன் தரத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றன. புதியவர்களுக்கும் இவர் வாய்ப்பளித்து மலையகத்தில் புதிய கவிஞர்களும் எழுத்தாளர்களும் தோன்றச் செய்தார். இதனால் மலையக எழுத்தாளர் மன்றத் தலைவராக இவர் நியமிக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டார்.  இலங்கை - இந்திய கல்விமான்களுக்கும் செய்தியின் மூலம் இவர் சிறந்த சேவைகளை ஆற்றினார். கே.சி தங்கராஜா ''ஈழநாடு'' பத்திரிகையை தொடங்கிய பொது அவருக்கு வலது கையாக  நின்ற இவர் ''ஈழநாட்டை'' மலையகமெங்கும் விநியோகம் செய்தார். இதன் மூலம் மலையக - யாழ்ப்பாண நட்புறவுப் பாலத்தை முதலில் அமைத்த பெருமைக்குரியவரகவும் திகழ்ந்தார்.

பத்திரிகையோடு மாத்திரம் இவரது பணி நின்று விடவில்லை. பல்வேறு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டு வந்தார். ''அகஸ்தியர் பதிவுகள்'' , ''எரி  நெருப்பில் இடைபாதை இல்லை''  மற்றும் புகழ் பெற்ற கவிஞரும் தொழிற் சங்கத் தலைவருமாகிய சி.வி.வேலுப்பிள்ளையின் ''தேயிலைத் தோட்டத்திலே'', கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் ''தணியாத தாகம்'' ஆகிய நூல்கள் இவரது வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் இன்றும் கவிதா பதிப்பகம் என்ற நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆக்கங்கள் உட்பட பல நூல்களை வெளியிட்டு தமிழ் இலக்கியத்தின் செழுமைக்குப் பங்களிப்பு செய்து வருகிறார். பத்திரிகைத் துறையின் மூலம் இவர் ஆற்றிய கலை இலக்கியப் பணி இவருக்குப் பெயரைத் தந்ததோடு சான்றோர் பலரின் அன்பையும் நட்பையும் பெற்றுத் தந்தது. 1960ல் பாவேந்தர் பாரதிதாசனை சந்தித்தது முதல் அவர் மறையும் வரை இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. திரைப்பட  உலகைச்சேர்ந்த டி.கே.எஸ்.சகோதரர்களான பகவதி, சண்முகம் ஆகியோரும்  இவரது நண்பர்களே. தமிழ்ப் பேரறிஞர் வண. தனி நாயகம்  அடிகளோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இணைந்து பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. இவரோடு இணைந்து முன்னாள் இந்திய ஜனாதிபதி தத்துவ ஞானி இராதாகிருஷ்ணனை சந்தித்ததை தனக்குக் கிடைத்த பெரும் பேறாகவே இவர் கருதுகிறார். தமிழ் அறிஞர் ம.பொ.சிவஞானம் இலங்கை வரும் போதெல்லாம் கண்டியிலுள்ள இவரது வீட்டில் தான் தங்குவது வழக்கம். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு மலர் வெளியிட்டு மாபெரும் விழா  கொண்டாடினார். மகாகவி பாரதியாருக்கு ஆண்டு தோறும் கண்டி மாநகரில்  விழா  கொண்டாடி மகிழ்ந்தார். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனுக்கும் விழாக் கண்டார். 1966ல் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனுக்கு நடைபெற்ற மணி விழாவை கண்டியில் இரு தினங்களுக்கு கொண்டாடிய இவர் அதை ஒட்டிய மணிவிழா மலர் ஒன்றை ''செய்தி'' பத்திரிக்கை மூலம் வெளியிட்டார். கி.வா.ஜகந்நாதன் இவருக்கு அனுப்பிய கடிதத்தில் 
                                                              பாகு தின்ற தெனப் பேசும்
                                                             பண்பாளச் செம்மை
                                                             நாகலிங்கம் காட்டும்
                                                             நயம் கண்டேன்  தாகமுறும்
                                                            அன்பு கண்டேன்  வாழ்க 

என்று குறிப்பிட்டிருப்பதை இன்றும் பெருமையோடு நினைவு கூர்கிறார். கிரிக்கெட் வீரர் முரளிதரனின் தந்தை முத்தையா அவர்களும் இவரது நீண்ட நாள்  நெருங்கிய நண்பராவர். அந்த நட்பை மறவாத இவர் சென்னையில் இடம் பெற்ற முரளிதரனின் திருமணத்தில் முதல் நபராகக் கலந்து கொண்டார். 1983ல் இடம் பெற்ற பயங்கர இனக்கலவரம் காரணமாக இவர் கண்டியில் இருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அப்போது இவர் தனது வாழ் நாள் முழுதும் சேகரித்து வைத்திருந்த ஆயிரக் கணக்கான புத்தகங்களை மலையகப் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கியதே இவரது தொண்டு உள்ளத்தைப் பறை சாற்றுகிறது. இந்தியா, இலங்கை,மலேஷியா, உட்பட உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களுடன் இன்றும் இறுக்கமான நட்புறவுகளைக் கொண்ட இவர் அது பற்றி  எதுவும் அலட்டிக் கொள்ளாமல் மிக அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து மக்கள் பணியாற்றி வருவதே இவரிடம் காணப்படும் அற்புத குணாம்சமாக இருக்கிறது. நான்  எதாவது சாதனை செய்திருந்தால் அந்தப்பெருமைக்குரியவர் எனது அருமைத் துணைவியார்  இந்திராணி அம்மையார் தான் என்று பணிவோடு கூறும் இவர் 90  வயதை நெருங்கிய நிலையிலும் பேச்சு, செயல், உடல்நலம், நடை உடை பாவனைகளில் துடிப்புள்ள இளைஞனாகவே காட்சி தருகிறார்.  ''நல்லதை  நினைப்போம், நல்லதைச் செய்வோம், நல்லதே நடக்கும்'' என்ற தாரக மந்திரத்தையே உறுதியாக நம்பும்  ''கண்டி தாத்தா'' ரா.மு. நாகலிங்கம் அவர்கள்  நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து தனது சமூக இலக்கியத் தொண்டுகளை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

Wednesday, September 19, 2012

உனது கற்பனைக்கும் ஒரு அளவே இல்லையா ...?

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது. அற்புதமானது. கொண்டாட்டமானது. மேலும் அவ்வுலகம்  அதீதமான   கற்பனைகளையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்ளடக்கியது.இவ்விடயம்  அனைத்து தலைமுறைகளுக்கும் பொருந்தும் எனலாம் . எனது இரண்டாவது மகள் தருணிஷா கேட்ட ''கடவுளுக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்வார்''  என்ற கேள்வி ஒரு சிறிய உதாரணம் தான். இது போல் எத்தனை லட்சம் குழந்தைகளுக்கு எத்தனை கோடி கேள்விகள் எழும்பியிருக்கும்.. ? சிறுவயதில் என் மனதிலும் எத்தனையோ கற்பனைகள்  கேள்விகள் சந்தேகங்கள் எழும்பியிருக்கின்றன. அவற்றில் நினைவில் இருக்கும் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் ஒரு சில நகைச்சுவையாக இருக்கலாம். ஒரு சில  முட்டாள்தனமாகக் கூட  இருக்கலாம்.  ஆனால் அவை  அனைத்தும் நான் குழந்தையாக அல்லது சிறுவனாக இருந்த பொது இயல்பாக ஏற்பட்டவையே.. அந்தக் கற்பனைகள் இதோ....
1) இந்தியா செல்லும் விமானம் வானத்தில் பறப்பதால் இந்தியா வானத்தில் இருக்கிறது.
2) சிங்கம் காட்டுக்கே ராஜா என்பதால் அது கிரீடம் உட்பட ஒரு அரசன் அணியும்  அனைத்து அணிகலன்களையும் அணிந்திருக்கும்.
3) ''மரதன் ஓட்டம்'' திரு. மரதன் என்பவருடைய நினைவாக நடைபெறுகிறது. (இலங்கையிலுள்ள பத்திரிகைகள் MARATHON RACE ஐ ''மரதன் ஓட்டம்'' என்று        தமிழில் குறிப்பிடுவது வழக்கம்.)
4)பூமி உருண்டையாக இருப்பதால் பூமியின் அடிப்பகுதியில் வசிப்பவர்கள் தலைகீழாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.                                                                           5)தேர்தல் என்றால் ஒரு பெரிய தேரை பலர் சேர்ந்து தள்ளுவார்கள். (தேர் +தள்ளு =தேர்தல்.)
6 )கறுப்புப் பணம் என்பது முழுமையாக கறுப்பு நிறத்தில் அச்சடிக்கப் பட்ட பணம்.
7)ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும்  பணத்தை லட்சக்கணக்கில் அச்சடித்துக்  கொடுத்து விட்டால் அவர்கள் பணக்காரர்கள் ஆகி  விடுவார்கள் தானே...?என் அப்படி செய்வதில்லை...?
8) MAY DAY என்றால் அது ''மேடை'' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது (MAY DAY என்றொரு  தினம் இருப்பதே அப்போது எனக்குத் தெரியாது)                               9) மின்னலைப் பார்த்த அடுத்த நொடியில் கண்கள் குருடாகிவிடும். (எனது அத்தை திருமதி.ஜெயலட்சுமி மனோகரன் சிறு வயதில்  இப்படி பயமுறுத்தியது  என் மனதில் ஆழமாகப்  பதிந்து  விட்டதால் இன்றும் நான் மின்னலை நேரடியாகப் பார்ப்பதே  இல்லை)
10) ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தில் இடம் பெற்ற ''சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்'' என்ற பாடலைப் பாடியவர் எனது அத்தையான திருமதி பிரேமா கந்தசாமி (உண்மையில் பாடியவர் பி சுசீலா)
11)மயில் மனிதர்களின் கண்களைக்  கொத்தும் குணம் கொண்டது (ஒரு பழைய பக்தித் திரைப்படத்தில் கடவுள் மயில் முலமாக ஒரு நடிகருக்கு கண்களைக் கொத்தி தண்டனை வழங்குவார். அதை உண்மை என்று நம்பி விட்டேன். )
12) CARNIVAL  என்பது ஒரு தமிழ்ச்சொல். (காணி + வேல் = CARNIVAL)
13) '' அவள் பெரிய பெண் ஆகிவிட்டாள்'' என்று வீட்டில்  பெரியோர்கள் பேசிகொள்வார்கள். அப்படி என்றால் 3 அடி உயரமான ஒரு பெண் திடீரென்று  5 அடி உயரமாக வளர்ந்து விட்டாள்.
14 ) முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அபிரகாம் லிங்கன் ஒரு தமிழர். (அவரது பெயர் முத்துலிங்கம் தர்மலிங்கம் போலவே இருப்பதால்)
15 ) மறைந்த முன்னாள் கத்தோலிக்க மதத் தலைவர் போப் 2 வது ஜோன் பால் ஒரு தமிழர்.(தமிழில் இவரை அருளப்பர் சின்னப்பர் என்று குறிப்பிடுவதால் )
16 )முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை வானொலி செய்தி வாசிப்பாளர் ''சற்சொருபவதி'' யும் ஒரே நபர் தான். ( இந்திரா காந்தியின் முகத்தையே சற்சொருபவதியின்  முகமாக அவரது குரல் எனது  கற்பனையில் படமாகக் கொண்டு வந்ததால்)
17 ) தனது வேட்டியையே ''வடி'' கட்டியாகப்  பயன்படுத்துவதால் தான் எமது பதுளைக் கடையின் முன்னாள் மேனேஜர் திரு ''வடி''வேல் அவர்களுக்கு அந்தப்  பெயர் வந்தது.
18 ) இராமாயணம் மகாபாரதம் ஆகிய  காப்பியங்கள்  நான் படித்த  பண்டாரவளை செந்.தொமஸ் பாடசாலையிலும் அதனைச் சுற்றியுள்ள காடுகளிலும் மலைகளிலும்  இடம்  பெற்றது. ( அந்தப் பாடசாலை நூலகத்தில்  இந்த இரு காப்பியங்களையும் படித்ததால்)                                                                         19)அசுரர்களோடு போர் புரிந்த தேவர்கள் தான், முக்குலத்தோர் இனத்தைச்  சேர்ந்த தேவர்களாகப் பிறந்துள்ளனர்.
 
நிறைவு பெற்றது எனது குழந்தைக் கற்பனைகள் .....நன்றி  நண்பர்களே.... மீண்டும் சிந்திப்போம்.....விரைவில்.......!

Wednesday, June 20, 2012

விலங்கு பூட்டும் விலங்குகள்

மனைவியின்  புதிய அழகு நிலைய திருத்த வேலைகள், மகளின் மருத்துவமனை அனுமதி, வாடகைக்கு வீடு தேடும் அலைச்சல், என்று பதிவுகளை   மேற் கொள்ள முடியாமல் வரிசையாகத் தடைகள். ஒரு பிரச்சனை முடிவதற்குள் இன்னொன்று வந்து விடுகிறது.  இது தான் வாழ்க்கை போலும். சரி...! இத்தனையையும் மீறி இதோ எனது மூன்றாவது பதிவு. 25.03.2012 அன்றைய வீரகேசரியில் வெளிவந்த ஒரு செய்தி எனது கவனத்தை ஈர்த்தது. இலங்கையில் போதைப் பொருள் விற்பனை  மற்றும் பயன்பாடு வேகமாக  அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு சிறிய உதாரணம். புறக்கோட்டையில் எனக்குத் தெரிந்த ஒரு  ஏற்றுமதித் தரகர்  போதைப் பொருள் விற்பனை  காரணமாக  5 வருடங்களில் 4 முறை சிறை சென்று திரும்பி விட்டார். அவருடைய வெற்றிப் பயணம் மேலும் தொடரும் என்பதே எனது எதிர்பார்ப்பு...! எனவே  இவற்றைத் தடுக்க புதிய உத்திகளைக்  கையாள வேண்டிய நிலை  இலங்கைப் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே போதைப் பொருள் வேட்டைக்கு நாய்களை விட அதிக மோப்ப  சக்தி கொண்ட கீரிப்பிள்ளை , பன்றி, முள்ளம்பன்றி போன்ற மிருகங்களைப் பழக்கப்படுத்திப் பயன்படுத்த முடியுமா என்று அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம் . இலங்கைப்  போலீசாரை இதுவரை குறை கூறிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வைத்தார்கள்  ஐயா  அருமையான ஆப்பு....!  இந்த ஆராய்ச்சி உண்மையிலேயே  நிறைவேறினால்  ஏற்படப் போகும்  நிலைமையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கொழும்பு நகர சோதனைச் சாவடிகளில் முள்ளம்பன்றிகள் முட்களை சிலிர்த்துக் கொண்டு காத்திருக்கும். குற்றவாளி அகப்பட்டால் முள்ளால்  ஒரே குத்து...! கொழும்புத் துறைமுகத்தில் கீரிப்பிள்ளை பாம்பைப் பிடிக்கிறதோ இல்லையோ  போதைப் பொருள் கடத்தும் நபர்களை ''லபக்'' என்று பிடித்து விடக் கூடும்...! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க பன்றிகளின் கூட்டம்  பயணிகளைச் சோதனை செய்யும் கண் கொள்ளாக் காட்சியைக் காணலாம்...! ஆனால்  இந்த நாய்களின் நிலை தான் பரிதாபம். கட்டாய ஒய்வு நிலைக்குத் தள்ளப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடும். காலப் போக்கில் மோப்ப சக்தியையே இலங்கை நாய்கள் மறந்து போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால் கீரிப்பிள்ளைகள் ,பன்றிகள், முள்ளம்பன்றிகள் ஆகியவற்றின் விலைகள் பெருமளவு அதிகரித்திருக்கும். இவற்றை வளர்ப்பவர்களே  இனி கோடீஸ்வரர்கள். என்ன நண்பர்களே....  நான் இவற்றை வளர்க்க ரெடி...! நீங்க ரெடியா..?

Sunday, May 13, 2012

உயிர் காத்த எங்கள் தலைமை ஆசிரியர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தலைவிதியையே தலைகீழாக மாற்றியது 1983ம் ஆண்டு இனக்கலவரமாகும். அப்போது தமிழர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டன.ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நான் பண்டாரவளை செந்.தோமஸ் கல்லூரியின் விடுதியில் தங்கி கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்பது செந்.தோமஸ் கல்லூரியின்  சிறப்பு அம்சமாகும். (இதே சிறப்பு அம்சம் ரோயல் போன்ற வேறு கல்லூரிகளிலும் உள்ளது)  ஜூலை மாத இறுதியில்  இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு நானும் சக மாணவர்களும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த வேளையில்  நாடு முழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் செய்தி எம் மத்தியில் பரவத் தொடங்கியது. பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டு கல்லூரியும் மூடப்பட்டது. எனினும் விடுதி  மாணவர்கள் எவரும் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மறுநாள் திடீரென்று கல்லூரியே பரபரப்புக்குள்ளானது. காரணம் சிங்கள காடையர்கள் தமிழ் மாணவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். இதனால் செய்வது அறியாது திகைத்த கல்லூரி விடுதிப் பொறுப்பாசிரியர்கள் அருகில் இருந்த மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் ஓடும்படி தமிழ் மாணவர்களைப் பணித்தனர். அதன்படி நாம் அனைவரும் உயிரைக் கையில் பிடித்த படி காட்டுக்குள் ஓடி ஒளிந்தோம். பூச்சிக் கடிகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு நீண்ட நேரம் காட்டுக்குள் இருந்த எங்களுக்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இனி ஆபத்து இல்லை அனைவரும் விடுதிக்குத் திரும்பலாம் என்ற செய்தி வந்தது. ஆம்...! எங்கள் தலைமை ஆசிரியரான எஸ்.எல்.ஏ.ரட்நாயக்க அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையாலும் புத்தி சாதுரியத்தினாலும் தான் அன்று நாங்கள் காப்பாற்றப் பட்டோம். சிங்கள காடையர்கள் கல்லூரியை நெருங்கியதும் வாயில் கதவை இழுத்து மூட ஆணையிட்டார்.  ''முதலில் என்னைக் கொன்று விட்டு பிறகு தமிழ் மாணவர்கள் மீது கை வையுங்கள்'' என்று நெஞ்சை  நிமிர்த்தி சீறியிருக்கிறார் அந்த வீரத்திருமகன்...! அவருக்கு பக்க பலமாக சிங்கள மாணவர்களும் ஆசிரியர்களும் துணை நிற்க சிங்கள காடையர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் பின் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். எஸ்.எல்.ஏ.ரட்நாயக அவர்களின் வேண்டுகோளை அடுத்து எங்கள் பாதுகாப்பிற்காக தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து உடனடியாக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று நான் உயிரோடு  இருந்து இந்த அனுபவத்தை எழுத முடிகிறது என்றால் அதற்குக் காரணம் எஸ்.எல்.ஏ. ரட்நாயக்க என்ற கருணை உள்ளம் படைத்த எங்கள் தலைமை ஆசிரியர் தான் என்பதில் எதுவித சந்தேகமும்  இல்லை. எங்கள் உயிரைக்காத்த அந்த வீரத்திருமகன் இன்று உயிரோடு இல்லை. அதனால் என்ன..? எம் நெஞ்சங்களில் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.                                                                                             

Tuesday, May 8, 2012

முதலாம் சந்திப்பு

இணையத்தில் உள்ள என்னைக் கவர்ந்த சில வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் வலைப்பூ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற‌ ஆவல் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.எனினும் இது பற்றிய எந்த விபரங்களும் எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் கூகிள் தளத்துக்குச் சென்று ''வலைப்பூ தொடங்குவது எப்படி?'' என்று  ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன்.வந்து விழுந்த விபரங்களோ என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. ''சீ..சீ...இந்தப்பழம் புளிக்கும்...!'' என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வலைப்பூ தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எனினும் என்றாவது ஒருநாள்  வலைப்பூ தொடங்குவேன் என்ற‌ நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. பிற‌கு எனது உயிரினும் மேலான‌ மனைவி மேனகா கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பேஸ்புக் சமூக வலையமைப்பில் எனது எண்ணங்களைச் சுருக்கமாகப் பதிவு செய்து கொண்டு வந்தேன். எனினும்  பேஸ்புக் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருவதால் எனது பதிவுகள் கீழே ஒடி மறைந்து கொண்டிருந்தன. இந்நிலையில் எனது உறவினரான சுதர்சினி ரமேஷ் என்னுடன் தொடர்பு கொண்டு ''உங்கள் எழுத்து நன்றாக உள்ள‌து. நீங்கள் வலைப்பூ ஒன்றைத் தொடங்கலாமே'' என்றார். ஏற்கனவே இவ்விடயத்தில் வெறுத்துப் போயிருந்த நான் ''இதற்கு எவ்வளவு செலவாகும்?''  என்று கேட்டவுடன் அவர்  சிரித்து விட்டார் .வலைப்பூவை உருவாக்க வீட்டிற்கு வரும் கணிணி நிபுண‌ரின் கட்டணம்.... வலைப்பூவிற்கு செலுத்த  வேண்டிய மாத சந்தா கட்டண‌ம்... என்றெல்லாம் கற்பனை செய்ததன் விளைவே அந்தக் கேள்வி..! ''ஒரு சதம் கூட செலவாகாது. நானே வலைப்பூ ஒன்றை உருவாக்கித்தருகிறேன். முதலில் நல்ல தமிழ்ப் பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்'' என்றார்.  நான் பரிசீலனை செய்த பல பெயர்களில் வலைப்பூக்கள் எற்கனவே இருந்தன. எனவே புதிய பெயரைத் தேட வேண்டி இருந்தது. மூன்று மாத முயற்சிக்குப் பிறகு எனக்குக் கிடைத்த பெயர் தான்''தேரோட்டம்...!''  பெயரைக் கூறிய அடுத்த சில நாட்களிலேயே வலைப் பூவை உருவாக்கிக் கொடுத்து விட்டார் சுதர்சினி. தொடங்கிவிட்டது ''தயாள‌னின் தேரோட்டம்!''. இந்த வேளையில் எனது முதல் ரசிகரும், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உற்சாகத்தை அளிக்கும் எனது மனைவி மேனகா...மற்றும் வலைப்பூவை உருவாக்கித் தந்து உதவிய  சுதர்சினி ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒருவரிடம் உள்ள  திறமையை இனம் கண்டு உற்சாகப்படுத்துவது மிகவும் அவசியமானது. இவ்விடயத்தில்  அனைவரும் சுதர்சினியைப் பின்பற்ற வேண்டும்...! தொடர்ந்து எனது எழுத்துக்களைப் படித்து ஆதரவு தரும் படி எனது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. வண‌க்கம்...!