மனைவியின் புதிய அழகு நிலைய திருத்த வேலைகள், மகளின் மருத்துவமனை அனுமதி,
வாடகைக்கு வீடு தேடும் அலைச்சல், என்று பதிவுகளை மேற் கொள்ள முடியாமல்
வரிசையாகத் தடைகள். ஒரு பிரச்சனை முடிவதற்குள் இன்னொன்று வந்து விடுகிறது.
இது தான் வாழ்க்கை போலும். சரி...! இத்தனையையும் மீறி இதோ எனது மூன்றாவது
பதிவு. 25.03.2012 அன்றைய வீரகேசரியில் வெளிவந்த ஒரு செய்தி எனது கவனத்தை
ஈர்த்தது. இலங்கையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு வேகமாக
அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு சிறிய உதாரணம். புறக்கோட்டையில் எனக்குத்
தெரிந்த ஒரு ஏற்றுமதித் தரகர் போதைப் பொருள் விற்பனை காரணமாக 5
வருடங்களில் 4 முறை சிறை சென்று திரும்பி விட்டார். அவருடைய வெற்றிப்
பயணம் மேலும் தொடரும் என்பதே எனது எதிர்பார்ப்பு...! எனவே இவற்றைத் தடுக்க
புதிய உத்திகளைக் கையாள வேண்டிய நிலை இலங்கைப் பொலிசாருக்கு
ஏற்பட்டுள்ளது. ஆகவே போதைப் பொருள் வேட்டைக்கு நாய்களை விட அதிக மோப்ப
சக்தி கொண்ட கீரிப்பிள்ளை , பன்றி, முள்ளம்பன்றி போன்ற மிருகங்களைப்
பழக்கப்படுத்திப் பயன்படுத்த முடியுமா என்று அவர்கள் ஆராய்ந்து
கொண்டிருக்கிறார்களாம் . இலங்கைப் போலீசாரை இதுவரை குறை
கூறிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வைத்தார்கள் ஐயா அருமையான ஆப்பு....!
இந்த ஆராய்ச்சி உண்மையிலேயே நிறைவேறினால் ஏற்படப் போகும் நிலைமையைக்
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கொழும்பு நகர சோதனைச் சாவடிகளில்
முள்ளம்பன்றிகள் முட்களை சிலிர்த்துக் கொண்டு காத்திருக்கும். குற்றவாளி
அகப்பட்டால் முள்ளால் ஒரே குத்து...! கொழும்புத் துறைமுகத்தில்
கீரிப்பிள்ளை பாம்பைப் பிடிக்கிறதோ இல்லையோ போதைப் பொருள் கடத்தும்
நபர்களை ''லபக்'' என்று பிடித்து விடக் கூடும்...! கட்டுநாயக்க விமான
நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க பன்றிகளின்
கூட்டம் பயணிகளைச் சோதனை செய்யும் கண் கொள்ளாக் காட்சியைக் காணலாம்...!
ஆனால் இந்த நாய்களின் நிலை தான் பரிதாபம். கட்டாய ஒய்வு நிலைக்குத்
தள்ளப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடும். காலப் போக்கில் மோப்ப
சக்தியையே இலங்கை நாய்கள் மறந்து போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆனால்
கீரிப்பிள்ளைகள் ,பன்றிகள், முள்ளம்பன்றிகள் ஆகியவற்றின் விலைகள் பெருமளவு
அதிகரித்திருக்கும். இவற்றை வளர்ப்பவர்களே இனி கோடீஸ்வரர்கள். என்ன
நண்பர்களே.... நான் இவற்றை வளர்க்க ரெடி...! நீங்க ரெடியா..?