இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தலைவிதியையே தலைகீழாக மாற்றியது 1983ம்
ஆண்டு இனக்கலவரமாகும். அப்போது தமிழர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன
அல்லது சூறையாடப்பட்டன.ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நான்
பண்டாரவளை செந்.தோமஸ் கல்லூரியின் விடுதியில் தங்கி கல்வி கற்றுக்
கொண்டிருந்தேன். தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்பது
செந்.தோமஸ் கல்லூரியின் சிறப்பு அம்சமாகும். (இதே சிறப்பு அம்சம் ரோயல்
போன்ற வேறு கல்லூரிகளிலும் உள்ளது) ஜூலை மாத இறுதியில் இரண்டாம் தவணைப்
பரீட்சைக்கு நானும் சக மாணவர்களும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த
வேளையில் நாடு முழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் செய்தி எம்
மத்தியில் பரவத் தொடங்கியது. பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டு கல்லூரியும்
மூடப்பட்டது. எனினும் விடுதி மாணவர்கள் எவரும் வீடு செல்ல
அனுமதிக்கப்படவில்லை. மறுநாள் திடீரென்று கல்லூரியே பரபரப்புக்குள்ளானது.
காரணம் சிங்கள காடையர்கள் தமிழ் மாணவர்களைக் குறி வைத்துத் தாக்குதல்
நடத்தும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்.
இதனால் செய்வது அறியாது திகைத்த கல்லூரி விடுதிப் பொறுப்பாசிரியர்கள்
அருகில் இருந்த மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் ஓடும்படி தமிழ் மாணவர்களைப்
பணித்தனர். அதன்படி நாம் அனைவரும் உயிரைக் கையில் பிடித்த படி காட்டுக்குள்
ஓடி ஒளிந்தோம். பூச்சிக் கடிகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு நீண்ட நேரம்
காட்டுக்குள் இருந்த எங்களுக்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. சுமார் ஒரு
மணி நேரத்துக்குப் பிறகு இனி ஆபத்து இல்லை அனைவரும் விடுதிக்குத்
திரும்பலாம் என்ற செய்தி வந்தது. ஆம்...! எங்கள் தலைமை ஆசிரியரான
எஸ்.எல்.ஏ.ரட்நாயக்க அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையாலும் புத்தி
சாதுரியத்தினாலும் தான் அன்று நாங்கள் காப்பாற்றப் பட்டோம். சிங்கள
காடையர்கள் கல்லூரியை நெருங்கியதும் வாயில் கதவை இழுத்து மூட ஆணையிட்டார்.
''முதலில் என்னைக் கொன்று விட்டு பிறகு தமிழ் மாணவர்கள் மீது கை
வையுங்கள்'' என்று நெஞ்சை நிமிர்த்தி சீறியிருக்கிறார் அந்த
வீரத்திருமகன்...! அவருக்கு பக்க பலமாக சிங்கள மாணவர்களும் ஆசிரியர்களும்
துணை நிற்க சிங்கள காடையர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் பின் வாங்கிச்
சென்றிருக்கிறார்கள். எஸ்.எல்.ஏ.ரட்நாயக அவர்களின் வேண்டுகோளை அடுத்து
எங்கள் பாதுகாப்பிற்காக தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து உடனடியாக ராணுவ
வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று நான் உயிரோடு இருந்து இந்த அனுபவத்தை
எழுத முடிகிறது என்றால் அதற்குக் காரணம் எஸ்.எல்.ஏ. ரட்நாயக்க என்ற கருணை
உள்ளம் படைத்த எங்கள் தலைமை ஆசிரியர் தான் என்பதில் எதுவித சந்தேகமும்
இல்லை. எங்கள் உயிரைக்காத்த அந்த வீரத்திருமகன் இன்று உயிரோடு இல்லை.
அதனால் என்ன..? எம் நெஞ்சங்களில் அவர் என்றென்றும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
Super experience and nice to see our School name there... And big hats off to that head master.. Ipdium Sinhalavanga irukathan seiranga :)
ReplyDeleteமனிதாபிமானமும் நியாய சிந்தனையும் மிக்க பல சிங்கள மக்களால் இவ்வாறு காப்பாற்றப்பட்ட பல தமிழர்கள் உண்டு...நாம் உட்பட... உங்கள் வீரத்திருமகனுக்கும் அவரோடு தோள் நின்ற அனைவருக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்...
ReplyDeleteReally a nice experience and thanks for brought tis experience to us. Amma andha kalavarithai pathi sollirukanga.... And she told tat bcos of some sinhales oly they were protected at tat time.... :) Tat head master is really great....
ReplyDelete